மோசடி, கொலை மிரட்டல்! அதிமுக முன்னாள் அமைச்சர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
Karur ADMK MR Vijaya Baskar Land Grabbing case
கரூர் : நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில், கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகாவை சேர்ந்தவர் பிரகாஷ்கிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்தில் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட நிலமோசடி வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டது.
இதனால் எம்ஆர் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய, அந்த மனுவை விசாரணை செய்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து எம்ஆர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கர் வட மாநிலத்திற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியானது. மேலும் அவரை பிடிக்க 5 தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாங்கல் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயர் சேர்க்கப்பட்டு கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Karur ADMK MR Vijaya Baskar Land Grabbing case