சீமான் மீது சட்ட நடவடிக்கை தேவை.. காவல் துறையில் திமுக புகார் மனு!
Legal action should be taken against Seeman DMK files police complaint
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா புகார் மனு அளித்தார் .
இது தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா அளித்துள்ளள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :கடந்த 08.01.2025 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வடலூர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது "உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கச்சியோ அவர்களோடு உடல் உறவை வெச்சிக்கிட்டு சந்தோசமா இரு என்று பெரியார் பேசியிருக்கார். இதற்கு என்ன பதில் சொல்ற?" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லாத வார்த்தைகளை அவர் சொல்லியிருக்கிறார் என்று இழிவாகவும் அறுவருக்கத்தக்க வார்த்தைகளையும் சொல்லி பொதுவெளியில் பேசியிருக்கிறார். இது அனைத்து காட்சி ஊடகங்களிலும் பதிவாகியுள்ளது. மேலும், சீமான் 'பிரபாகரனை சந்திக்கும் வரை நானும் திராவிடர் எனும் திருடர் கூட்டத்தில் தான் இருந்தேன்' என்று
திராவிடர்களை திருடர்கள் என்று இழிவாக பேசியது மட்டுமல்லாமல் அமைதியான புதுச்சேரியில் கலவரத்தை தூண்டும் வகையில் மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தரங்கெட்ட வகையில் பேசியுள்ளார்.
தந்தை பெரியார் பேசியதாக சீமான் குறிப்பிட்டு பேசிய அனைத்தும் ஆதாரமற்ற பொய். பெரியார் எந்த ஒரு இடத்திலும் அப்படி பேசியதோ எழுதியதோ இல்லை என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது அரசியல் சுயலாபத்திற்காக மலிவான அரசியலை செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயல்படுகிறார். பெண்ணுரிமை போராளியான எங்கள் திராவிட கொள்கைகளுக்கு வித்திட்ட தந்தை பெரியார் அவர்கள் மீது சீமான் போன்றோர் இழிவுபடுத்தி பேசுவதை ஒருநாளும் ஏற்கமாட்டோம். சீமானின் இத்தகைய பேச்சு எங்கள் கழக உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழினத் தலைவர் தந்தை பெரியார் அவர்களை அவமதிப்பது ஒட்டுமொத்த தமிழர்களை அவமதிப்பதாகும். தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், செல்வி. ஜெயலலிதா மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வரை ஐம்பெரும் முதலமைச்சர்களுக்கு வழிகாட்டியான பெரியாரை இழிவு செய்த சீமான் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
தமிழகத்தில் அவர் அநாகரியமாக பேசியது குறித்து பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும், நீதிமன்றம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அதே நிலையில் புதுச்சேரியில் அவர் மீது அவதூறு பேச்சு கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தமிழினத் தலைவரை இழிவாக பேசி எங்கள் கட்சியையும், தலைவரையும் கொச்சைப்படுத்தி பேசி பல கோடி தொண்டர்களின் மனதை புண்படுத்திய சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா புகார் மனு அளித்துள்ளார்.
English Summary
Legal action should be taken against Seeman DMK files police complaint