பெறப்பட்ட அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு.!
Lock and seal notice for unauthorized and deviation buildings
பெறப்பட்ட கட்டட அனுமதிக்கு புறம்பாக கட்டுமானம் மேற்கொண்ட 66 கட்டடங்களுக்கு பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட கட்டட அனுமதிக்கு புறம்பாக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் மீது தமிழ்நாடு நகர் மற்றும ஊரமைப்பு சட்டம் 1971ன்படி (Tamil Nadu Town and Country Planning Act 1971) நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வார்டின் உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்கு சென்று கண்டிப்பாக ஆய்வு செய்து கட்டட அனுமதி உள்ளதா எனவும், அனுமதிப்படி கட்டுமானம் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு மேற்கொள்ளப்படும் கள ஆய்வின்போது கட்டட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் அனுமதிக்கு புறம்பாக கட்டுமானம் நடைபெறும் கட்டடங்களின் கட்டுமான பணியை அடித்தள கட்டுமான நிலையிலேயே (Pinth Level) நிறுத்த நோட்டிஸ் வழங்கவும், நோட்டீஸ் வழங்கப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகும் கட்டுமானத்தில் திருத்தம் மேற்கொள்ளாத கட்டடங்களுக்கு பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுமதி பெறாத மற்றும் அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கு நிராகரிக்கப்பட்ட கட்டடங்களில் மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட கட்டிடத்தை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் ஜன்னல், கதவுகள் மற்றும் கழிவறை குழாய்கள் போன்றவற்றை அகற்றவும், மின் இணைப்பைத் துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானம் நடைபெறும் இடங்களில் சம்பந்தப்பட்ட கட்டடம் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்று கட்டப்படுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கவும், அதில் கட்டட அனுமதி எண், அனுமதிக்கான கால அளவு, சர்வே எண், தளங்களின் எண்ணிக்கை மற்றும் சுற்றிலும் விடப்பட வேண்டிய இடைவெளியின் அளவு போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 15 நாட்களில் மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் அனுமதிக்கு புறம்பாக கட்டுமானம் நடைபெற்ற 467 கட்டுமான இடங்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 66 கட்டுமான இடங்களுக்கு பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, கட்டுமானப் பணி மேற்கொள்ளும் நபர்கள் பெறப்பட்ட அனுமதியின் படி கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
English Summary
Lock and seal notice for unauthorized and deviation buildings