நான்தான் இவனை கொலை செய்தேன்... மதுரையில் இரு நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள்!
Madurai 3 murder in 2 days
மதுரை ஆனையூரில் ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் அழகுபாண்டியை கொலை செய்த சம்பவம், வாடிப்பட்டியில் சரவணபாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் என இரு நாள்களில் இரண்டு கொலைகள் நடந்துள்ள நிலையில், உத்தங்குடி அருகே மூன்றுவதாக ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம், உத்தங்குடி அருகே உலகனேரி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த அபினேஷ் (27), ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய அவர், வாசலருகே நின்று கொண்டிருந்தபோது மதுபோதையில் வந்த நபர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில், அந்த நபர் விறகு கட்டையால் அபினேஷை திடீரென தாக்கினார். மயங்கி விழுந்த அபினேஷின் முகத்தையும் மீண்டும் தாக்கி கொலை செய்துள்ளார் அந்த நபர்.
சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டபோதும், ‘நான்தான் இவனை கொலை செய்தேன்; அனைவரும் என்னை கண்டு பயப்பட வேண்டும்’ என கூறி சவால் விட்டபடி அந்த நபர் தப்பியோடினார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், மாடு வளர்ப்பு தொடர்பான விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது தெரியவந்தது. அபினேஷ் மற்றும் கொலையாளி இருவரும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனிப்படை போலீசார் தற்போது கொலையாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
Madurai 3 murder in 2 days