தமிழகத்தில் வரும் 14-ம்தேதி ம.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு.!
mdmk party protest in tamilnadu coming 14th in tamilnadu
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:-
"பத்து ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் மத்திய பா.ஜ.க., அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலத்தை இழந்த பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்தக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள பா.ஜ.க., அரசு, கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வைத்த கோரிக்கையை மத்திய பா.ஜ.க., அரசு நிராகரித்து வெறும் 276 கோடி ரூபாய் மட்டுமே அளித்திருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆகஸ்ட் 14-ம்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு வருவாய் மாவட்டங்களின் தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mdmk party protest in tamilnadu coming 14th in tamilnadu