நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
mk stalin vedio about karunanithi birthday
மறைந்த தி.மு.க தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான கருணாநிதிக்கு இன்று 101-வது பிறந்தநாள் விழா கொண்டப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காலை 9 மணியளவில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் முழு உருவச்சிலைக்கு காலை 9.15 மணியளவில் மாலை அணிவித்தார்.
அங்கு கருணாநிதி உருவச்சிலைக்கு கீழே பூக்களால் அலங்கரித்து வைக்கப்படும் உருவப்படத்துக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து காலை 9.30 மணியளவில் சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிலையில், கருணாநிதி பிறத்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- "நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி. இந்த பூமி பந்தில் வாழும் தமிழர்களுக்கு எல்லாம் குடும்ப தலைவர். இந்திய நாடே அண்ணாந்து பார்த்த அரசியல்ஞானி. எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே. அவர் ஆண்ட ஆண்டும், வாழ்ந்த ஆண்டும் மட்டும்மல்ல எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே.
வீழ்ந்து கிடந்த தமிழ் சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக தோன்றி வாழும் காலத்தில் ஒளி தரும் உதயசூரியனாய் வாழ்ந்து, நிறைந்து பிறகும் கலங்கரை விளக்கமாக வழிகாட்டி கொண்டிருப்பவர்தான் கலைஞர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். உலக நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு தொழில் வளர்ச்சி கண்டு வருகிறோம்.
மகளிர் மனங்களில் மகிழ்ச்சியின் விளையாட்டு... மாணவ-மாணவர்களின் உள்ளங்களில் உணர்ச்சியின் தாலாட்டு... விவசாயிகளின் எண்ணங்களில் பசுமையின் நீராட்டு... இதுதானே நீங்கள் நினைத்தது. நீங்கள் கனவு கண்ட கம்பீர தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டுகிறோம். நீங்கள் நினைத்தீர்கள். நாங்கள் செய்து காட்டி வருகிறோம். நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்துவருகிறேன். நீங்கள் பாதை அமைத்தீர்கள்.. நாங்கள் பயணத்தை தொடர்கிறோம். உங்கள் பெயரை காக்க எந்நாளும் உழைப்போம். உழைப்பு... உழைப்பு... உழைப்பு... என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
mk stalin vedio about karunanithi birthday