மாற்றுத்திறனாளியை பாதியிலேயே இறக்கிவிட்ட பேருந்து நடத்துனர் இடைநீக்கம்.!
near tirupur bus conductor Dropped Disabled person in bus
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர் அப்பகுதியில் ஒரு பானி பூரி கடை நடத்திவருகிறார். இவருக்கு 80 சதவீத பார்வை குறைபாடு உள்ளது. அதனால், இவருக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டையில், இவரை வழி நடத்த உடன் ஒருவர் செல்லவும் வசதி உள்ளது.
இந்த நிலையில், சத்யராஜ் தனது மனைவி மற்றும் 17 வயது மகனுடன் வீரபாண்டியில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்வதற்கு மாநகராட்சி பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார். அந்த பேருந்தில் மனைவிக்கு பெண்களுக்கான இலவச பயணம் என்பதால் தனக்கும் தனது மகனுக்கும் இலவச பேருந்து பயண அட்டை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த பேருந்தில் உள்ள நடத்துனர் முத்துக்குமார், உங்கள் மனைவிக்கு தான் பாஸ் உள்ளது. மகனுக்கு பயண சீட்டு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு சத்யராஜ் தனக்கு உள்ள சலுகையை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதனால் கோபமடைந்த நடத்துநர் மூன்று பேரையும் கீழே இறங்க சொல்லி உள்ளார்.
இதனை சத்யராஜின் 17 வயது மகன் சிபிராஜ் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த நடத்துனர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சத்யராஜ் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாற்றுத்திறனாளியை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனர் முத்துக்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
near tirupur bus conductor Dropped Disabled person in bus