பேருந்துகளில் பெண்களுக்கு ஆண்களால் தொல்லையா? இதோ உங்களுக்காக ஒரு புதிய வசதி.!
new facility in chennai city bus
சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பயணிகள் தான் பயணம் செய்ய விரும்பும் பேருந்து எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதை அறிவதற்கு 'சலோ' செயலி பயன்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக தற்போது சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக சென்னை மாநகரில் இயங்கும் சுமார் 1200 மாநகர பேருந்துகளில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த அவசர பட்டனை பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கள் பெண்களை உரசினாலோ அல்லது பாலியல் தொல்லை கொடுத்தாலோ உடனடியாக அழுத்தலாம்.
அவ்வாறு அந்த பட்டனை அழுத்துவதன் மூலம், அந்த நபர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பொது இடங்களிலும், பேருந்துகளிலும் பெண் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியுடன் மாநகர போக்குவரத்து கழகம் இணைந்து இன்றும், நாளையும் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துகின்றன.
அந்தவகையில், சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், பிராட்வே, திருவான்மியூர் மற்றும் கிண்டி உள்ளிட்ட மாநகர போக்குவரத்து கழக டெப்போக்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.
இதன் மூலம் பாலியல் தொல்லைக்குள்ளாகும் பெண்கள் பேருந்துகளில் உள்ள அவசர பட்டன்களை எப்படி பயன்படுத்துவது, அரசு உதவி எண்களை எப்படி கையாள்வது என்பது குறித்து பெண்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நடைபெற்ற டெப்போக்களில் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பேருந்தில் அவசர பட்டனின் அமைப்பு, அவை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து காண்பிக்கப்பட்டது. மேலும், தெரு நாடகமும் நடைபெற்றது.
English Summary
new facility in chennai city bus