டாஸ்மாக்-இல் முறைகேடுகளை தடுக்க திட்டம்; எதிர்ப்பையும் மீறி இனி எல்லாம் கணனி மயம்..! - Seithipunal
Seithipunal


மதுபான ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்ப்பை மீறி, ஆலை முதல் கடை வரை, மது வகை விற்பனையை எங்கிருந்தபடியும் கணினியில் கண்காணிக்கும் திட்டத்தை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் உட்பட, 12 மாவட்ட மதுக் கடைகளில், 'டாஸ்மாக்' நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் நிறுவனம், 4,830 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபானங்களை விற்கிறது. 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது.

இந்நிலையில், ஆலைகளில் இருந்து மதுபான வகைகள், டாஸ்மாக் கிடங்கிற்கு லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன; அங்கிருந்து, மதுக் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

அத்துடன், கடைகளில் மது வகை இருப்பு, தேவைப்படும் மது வகை உள்ளிட்ட விபரங்களை மேற்பார்வையாளர்கள், மேலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப, மது வகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகளுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றுமன்றி அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட கூடுதலாக விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன. 

இவற்றை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிடங்குகளில் இருந்து பெறப்பட்டு மதுபிரியர்களுக்கு விற்பது வரை கணினிமயமாக்க, துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்

அதன்படி, இதற்கான பணி ஆணை, மத்திய அரசின் 'ரெயில்டெல்' நிறுவனத்திடம் டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியுள்ளது.  294 கோடி ரூபாய் திட்டச்செலவில் செயல்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்நிறுவனம், கணினி மய கண்காணிப்பு மென்பொருள் உருவாக்கம், அனைத்து கடைகளுக்கும் கையடக்க 'ஸ்கேனர், பிரின்டர்' கருவிகள் வழங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பு பணிகளை பராமரிக்க வேண்டும். இது தவிர, ஆலையில் மதுபான பாட்டில், 'கன்வேயரில்' செல்லும் இடத்தின் மேல், ஸ்கேன் செய்யும் இயந்திரம் அடங்கிய கட்டமைப்பை, மதுபான நிறுவனங்கள் சொந்த செலவில் ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது.

இதற்கு மது உற்பத்தி ஆலைகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, 'கணினிமய வசதியை ஏற்படுத்தவில்லை எனில், மது கொள்முதல் நிறுத்தப்படும்' என, டாஸ்மாக் எச்சரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக அரக்கோணம், ராமநாதபுரம் மாவட்ட மதுக் கடைகளில் கையடக்க வடிவில், 'பார்கோடு ரீடர்' கருவிகளும், பிரின்டர் கருவிகளும் வழங்கப்பட்டன. கருவியில் மது பாட்டில் மேல் உள்ள க்யூ.ஆர்., குறியீடை 'ஸ்கேன்' செய்ததும், பாட்டில் வகை, விலை, விற்பனை நேரம் உள்ளிட்ட விபரங்கள் பதிவாகின்றன. அதிலிருந்து பிரின்ட் கொடுத்ததும் வரும் ரசீது, மது வாங்குபவர்களிடம் வழங்கப்படுகிறது.

இதன் வாயிலாக, கடையில் மது விற்பனை விபரங்களை, கணினியில் அதிகாரிகள் எங்கிருந்தபடியும் அறிய முடிகிறது. தற்போது, காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு, திருவள்ளூர் மேற்கு, திருப்பூர், திருச்சி, சிவகங்கை, கரூர், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்ட மதுக் கடைகளில் கணினிமய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், ஆலையில் மது பாட்டில் மேல், 'ஹாலோகிராம் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. எத்தனை பாட்டில் மது வாங்கப்படுகிறதோ, அதனுடன் சேர்த்து கூடுதலாக, 0.15 சதவீத அளவு ஸ்டிக்கர் வழங்கப்படும். தற்போது, கணினிமய திட்டத்தால், எத்தனை ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டன; பயன்படுத்தப்படாதவை எவை என்ற விபரங்களை அறிய முடிகிறது. மதுக் கடைகளில் நடக்கும் விற்பனை விபரத்தை துல்லியமாக அறிய முடிகிறது என்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து, இரவில் கடை மூடிய பின் விற்பனை கணக்கை சரிபார்க்க, ஊழியர்களுக்கு இரண்டு மணி நேரமாகும். இந்த பணி தற்போது 10 நிமிடங்களில் நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் மற்ற அனைத்து மாவட்டங்களிலும், அத்திட்ட பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor factories computerize despite opposition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->