வேலைநிறுத்த போராட்டம் தொடரும்; என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு.!
NLC contractual workers announced strike will continue
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்யும் வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.50,000 சிறப்பு ஊதியம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் இன்றோடு 6வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர என்எல்சி அதிகாரிகள் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்துடன் ஆன முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று மாலை கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில், அதிகாரம் உள்ள என்எல்சி அதிகாரிகள் யாரும் வராததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இயக்குனர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் யாரும் வராத காரணத்தால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதால் திட்டமிட்டபடி அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும் என தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் சேகர் கூறியுள்ளார் இன்னும் ஓரிரு நாட்களில் மின்உற்பத்தி பாதிக்கப்படும் அளவிற்கு போராட்டத்தை தொடங்க இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
NLC contractual workers announced strike will continue