காவிரியில் உபரி நீர்த் திறப்பு எதிரொலி : ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு..!!
Ogenakal Water Incoming Increased due to Water Opened in Cauvery
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து இந்த அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 20, 000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இருந்து இன்று காலை வரை நீர் வரத்து வினாடிக்கு 5000 கன அடியாக உள்ளது.
இதன்காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அருவிகள் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகின்றன. இதனிடையே கர்நாடக அணைகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால், காவிரியில் தமிழகத்திற்கு உபரி நீரும் அதிகளவில் திறக்கப் பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் தமிழக - கர்நாடக எல்லையில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் காவிரியில் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Ogenakal Water Incoming Increased due to Water Opened in Cauvery