பெரும் கொடுமை, பெரும் அச்சுறுத்தல்! திமுக தவிர்த்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பறந்த கடிதம்!
PT Krishnasamy letter to All Party For Manjolai Issue
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் மறைமுகமாகக் கட்டாயப்படுத்தி, வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த, வருகிற ஜூன் 20ம் தேதி துவங்கவுள்ள தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் குரல் கொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாஜக அண்ணாமலை, காங்கிரஸ் செல்வப் பெருந்தகை, முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், ஜெகன் மூர்த்தி ஆகியோருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட களக்காடு – முண்டந்துறை வனப்பகுதியில் 8373 ஏக்கர் பரப்பளவில் பிபிடிசி என்ற தனியார் தேயிலை நிறுவனம் இயங்கி வருகிறது.
அந்நிறுவனத்தில் தற்போது ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைவதாகவும், நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அந்நிறுவனம் சில பணப் பலன்களை அறிவித்து, விருப்ப ஓய்வு என்ற பெயரில் மறைமுகமாக கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி விருப்ப ஓய்வு படிவத்தில் கையெழுத்து பெற்று, அவர்களை வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இதனால் அம்மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேயிலைத் தோட்டங்களைத் தமிழக அரசு மீட்டு, தமிழக தேயிலைத் தோட்ட கழகமே (TANTEA) எடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, இது குறித்து தமிழக அரசை வலியுறுத்தும் வகையில், வருகிற ஜூன் 20ம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கிருஷ்ணசாமி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
PT Krishnasamy letter to All Party For Manjolai Issue