சிறைக் கைதிகளுக்கான முன் விடுதலையில் காட்டப்பட்ட பாரபட்சமே மாதையன் உயிரிழப்புக்கு காரணம்.! சீமான் குற்றச்சாட்டு.!
Seeman statement on Madhaiyan death
சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம் என்று சீமான் குற்றம்சட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சிறைக்கொட்டடியில் 35 ஆண்டுகளாக வாடிய ‘வனக்காவலர்’ ஐயா வீரப்பன் அவர்களின் மூத்தச்சகோதரர் அண்ணன் மாதையன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
குற்றமற்றவரெனும்போதிலும், கொடும் சூழ்ச்சிக்கு இரையாக்கப்பட்டு, குற்றவாளியாக சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, 35 ஆண்டுகாலமாகப் பெருந்தண்டனையை அனுபவித்த அண்ணன் மாதையன் அவர்கள் சிறைக்கொட்டடியிலேயே உயிர்நீத்தது ஏற்கவே முடியாதப் பேரவலமாகும்.
அவரை விடுவிப்பது குறித்து ஆலோசித்திட வேண்டுமென உயர் நீதிமன்றம் மாநில அரசுக்குப் பரிந்துரைகளைக் கொடுத்தும், அதனை ஏற்காத திராவிடக்கட்சிகளது ஆட்சியதிகாரங்களின் கொடுங்கோல் போக்கே அண்ணன் மாதையனின் உயிரைப் பறித்திருக்கிறது.
சிறை நன்னடத்தை, வயது மூப்பு போன்ற காரணிகளை முன்வைத்து, வாழ்நாள் தண்டனை சிறைவாசிகள் முன்விடுதலை கோரும் வாய்ப்பை சட்டமும், இந்நாட்டின் சனநாயக அமைப்பும் முறையான வழிகாட்டுதலுடன் விடுதலைக்கான வாய்ப்பை வழங்கியுள்ள நிலையில், அதனை முற்றாக மறுத்து 35 ஆண்டுகளாகச் சிறைக்குள்ளேயே அவரை அடைத்து வைத்தது பெரும் மனிதவதையாகும்.
‘சிறைகள் என்பவை சீர்திருத்தக்கூடங்கள்தானே ஒழிய, கொலைக்களங்கள் அல்ல’ எனும் கருத்தை அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்டப் பல தலைவர் பெருமக்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், அதனைக் கடைபிடித்திடாது அரசியல் பழிவாங்கல் போக்குக்காக, பன்னெடுங்காலமாக அண்ணன் மாதையன் அவர்களை சிறைக்கொட்டடிக்குள்ளே அடைத்து வைத்திருந்ததாலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்பது சொல்லவியலா கொடுந்துயரமாகும்.
மேலும், வீரப்பன் கூட்டாளிகள் என்கிற பொய்க்குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டு, 1993 முதல் 29 ஆண்டுகளாக மைசூரு சிறையில் இருந்த அண்ணன் சைமன் மற்றும் பிலவேந்திரன் ஆகிய இருவரும் பல்வேறு உடல் உபாதைகளால் சிறையிலேயே மரணித்ததைத் தொடர்ந்து, புற்றுநோய் சிகிச்சைக்காக பெங்களூரு சிறையிலிருக்கும் அண்ணன் ஞானபிரகாசையும், உடல்நலக்குறைவால் நலிந்திருக்கும் மைசூரு சிறையிலுள்ள மீசக்கார மாதையனையும் எப்பாடுபட்டாவது காக்க வேண்டியது நமது தார்மீகக்கடமையாகும்.
ஆகவே, வீரப்பன் தேடுதல் வேட்டையில் கைதுசெய்யப்பட்டு இன்றும் பல்வேறு சிறைகளிலிருக்கும் தமிழர்களை விடுவிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்.
இத்தோடு, வாழ்நாள் சிறைவாசிகளின் முன்விடுதலைக்கொள்கையில் பாரபட்சம் காட்டாது விடுதலை செய்யவும், பெங்களூரு மற்றும் மைசுரு சிறைகளில் உயிருக்குப் போராடும் கர்நாடக தமிழர்களின் உயிர்காக்கவும் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman statement on Madhaiyan death