தமிழகத்தில் மட்டும் உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை! திமுக அரசுக்கு பாஜக கடும் கண்டனம்!
bjp condemn to DMK Govt
தேர்தல் வாக்குறுதியில் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் பெட்ரோல் விலையை 5 ரூபாயும் குறைப்பதாய் கூறி தற்போது டீசலுக்கு கூடுதல் நுழைவு வரி விதிக்க திமுக அரசு பரிசீலித்து வருவதாக தமிழ்நாடு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "பால் விலையை குறைப்போம் என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆவின் பிரிமியம் பால் விலையை கடந்த 2022ஆம் ஆண்டில் 25 சதவிகிதம் உயர்த்தியும் திருப்திபடாமல், பச்சை நிற மேஜிக் பால் பாக்கெட்டுகளின் விலையையும் உயர்த்தி, ஆவின் நெய்யின் விலையையும் லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்தி மக்களின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கினீர்கள்.
'விடியல்' ஆட்சியில் மாத மாதம் மின்சார கணக்கீடு செய்வோம் என்ற உங்கள் தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, மின்சார கட்டணத்தை மேலும் 2.18 சதவீதம் உயர்த்தி மக்களின் வாழ்வை இருளாக்கினீர்கள்.
சொத்து வரியை கடந்த 2022 ஆம் ஆண்டு 50 சதவீதம் வரை உயர்த்திவிட்டு, இரு மாதங்களுக்கு முன் சென்னையில் மேலும் 6 சதவீதம் வரை உயர்த்த அனுமதித்ததின் வாயிலாக, மக்களின் வீடு வாங்கும் கனவை இடித்து விட்டீர்கள்.
இப்படி அனைத்தும் பொருட்களின் விலைவாசியையும் உயர்த்தி மக்களை மேலும் வதைப்பதுதான் உங்கள் திராவிட மாடலா?
தங்கள் நிதி நிர்வாக தவறுகளை மறைத்து, நிதி நெருக்கடியை சமாளிக்க, தொடர்ந்து அனைத்து பொருட்களின் விலைவாசியை ஏற்றி எளிய மக்களை வறுமைக்கு தள்ளுவதுதான் தங்கள் சமூக நீதியா?
இறுதியாக, டீசலுக்கு புதிய வரிவிகித்து, அதன் வாயிலாக அனைத்து பொருட்களின் விலை ஏற்றத்துக்கு வழிவகுத்து, தமிழக மக்களை மேலும் வதைக்காமல், டீசல் நுழைவு வரி விதிக்கும் பரிசீலனையை உடனே கைவிடுங்கள்! விலையை ஏற்றுவதில் தாங்கள் காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்காவது, தங்கள் ஆட்சிப்பணியை முன்னேற்றுவதில் காட்டுங்கள் முதல்வரே" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.