வேளாண் விளை நிலங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
Tasmac shop Agri Land
வேளாண் விளை நிலங்களின் அருகே டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த கடை விளை நிலங்கள் அதிகம் உள்ள பகுதில் அமைய உள்ளது. இங்கு டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டால் அது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும், எனவே விவசாய விளை நிலங்கள் அருகில் மதுபான கடகளை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகர் பகுதி விளை நிலம் என்பதால் அங்கு டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்கப் போவதில்லை என்று அரசுத் தெரிவிக்கப்பட்டது. மேலும் என்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே, உரிய இடத்தில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பின், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.