பல்கலைக்கழக மாணவி மீது அத்துமீறிய விவகாரம்.. போக்சோ வழக்கில் நடவடிக்கை தேவை..உண்மை அறியும் குழு வலியுறுத்தல் ! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி சிறுமி என்பதால் குற்றமிழைத்தவர்கள் மீது போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி மீது நடந்த அத்துமீறல் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உருளையன்பேட்டை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 15க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த 20.01.2025 அன்று தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. மோகன், பொறுப்பு பதிவாளர் திரு. சுந்தரமூர்த்தி உள்ளிட்டோரை சந்தித்து விரிவாக பேசியது. பின்னர், சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி. திரு. கலைவாணன், ஐ.பி.எஸ். அவர்களை சந்தித்து பேசியது. 


சம்பவத்தின் சுருக்கம்:

கடந்த 11.01.2025 அன்று, மாலை 5 மணியளவில், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஆண் நண்பரான மாணவர் ஒருவருடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பேசிக் கொண்டே நடந்து சென்றுள்ளனர். அப்போது பல்கலைக்கழகத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத வெளியாட்கள் 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். அப்போது அந்த மாணவியை முறைத்துப் பார்த்துள்ளனர். அதற்கு அம்மாணவி எதிர்ப்புத் தெரிவிக்கவே அம்மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரான மாணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கைகலப்பாகி அம்மாணவி மற்றும் அவரது நண்பரான மாணவர் இருவரையும் அடித்துள்ளனர். அம்மாணவிக்கு வலது முழங்கை, வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேற்சொன்ன 4 பேரில் ஒருவர் செல்போனில் அழைத்ததின் பேரில் இன்னொருவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போது மாணவ, மாணவியர்கள் கூடி விடவே அந்த 5 பேரும் தங்களது மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி இருக்கிறார்கள். பின்னர், அம்மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரான மாணவர் இருவரும் துணைவேந்தர் திரு.மோகன், பொறுப்பு பதிவாளர் திரு. சுந்தரமூர்த்தி ஆகியோரிம் நடந்த சம்பவம் குறித்து புகார் கூறியுள்ளனர். பின்னர், இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரித்து பின்னர் 11.01.2025 அன்று இரவு சுமார் 10 மணியளவில்,  அம்மாணவியை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அங்குப் பணியில் இருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததோடு, மாணவி கூறியதின் அடிப்படையில் "அடையாளம் தெரியாத 4 பேர் தாக்கினர் (Assault by four unknown persons)" என எம்.எல்.சி. (Medico Legal Case) போட்டு, காலாப்பட்டு காவல்நிலையத்திற்கு முறைப்படி தகவல் (Intimation) அளித்துள்ளனர். பின்னர், கடந்த 14.01.2025 அன்று, பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் திரு. சுந்தரமூர்த்தி எழுத்துமூலம் அளித்த புகாரின் பேரில் காலாப்பட்டு காவல்நிலைய காவல் அதிகாரி முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளார் (Cr.No.6/2025 u/s 296(b), 329(3) r/w 3(5) BNS 2023). அதாவது பி.என்.எஸ். சட்டப் பிரிவுகள் 296(பி) ஆபாசமாகப் பேசுதல், 329(3) அத்துமீறி நுழைதல் உடன் 3(5) ஒருவர் செய்யும் குற்றத்திற்குக் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது காலாப்பட்டு காவல்நிலையப் போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 1) அரும்பார்த்தபுரம் ஷாம் (வயது 19), வில்லியனூர் விமல் (வயது 19) மற்றும் 2 சிறுவர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் 5வது நபரான ஒருவரை தேடி வருகின்றனர் என்று தெரிகிறது. இச்சம்பவத்தின் போது அம்மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் என்று தெரிகிறது. அதனைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நிர்வகமும், காவல்துறையும் மறைத்து இருப்பதாக தெரிகிறது. பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அங்குப் பயிலும் மாணவர்களுக்குக் குறிப்பாக மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று புதுச்சேரி அரசு மீது அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இச்சம்பவம் மாணவ, மாணவியர் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பார்வைகள்:

1) தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் திரு. சுந்தரமூர்த்தி பாதிக்கப்பட்ட மானவிக்கு வயது 17 எனக் குழுவினரிடம் கூறினார். அதனால், பாதிக்கப்பட்ட மாணவி சிறுமி என்பதால் இவ்வழக்கில் போக்சோ (POCSO Act) சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்சோ சட்டப் பிரிவு 19-ன்படி குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் அதுவே கடும் குற்றமாகும். 

2) மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் கடந்த 11.01.2025 அன்று, மாலை 5 மணிக்கு நடந்த போதும் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் கடந்த 14.01.2025 அன்றுதான் காலாப்பட்டு காவல்நிலையத்தில் எழுத்துமூலம் புகார் அளித்துள்ளார். அன்றைய தினமே காலாப்பட்டு போலீசார் மேற்சொன்னபடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  குறிப்பாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு காயங்கள் இருந்தும் அவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகாரில் தெரிவிக்காதது உண்மையை மூடிமறைக்கும் (Concealing of facts) செயலாகும்.

3) பி.என்.எஸ். சட்டப்பிரிவுகள் 296(பி) ஆபாசமாக பேசுதல், 329(3) அத்துமீறி நுழைதல் ஆகிய இரு பிரிவுகளும் உடனே ஜாமீனில் வரக் கூடிய குற்றங்கள் ஆகும். மேலும், இச்சட்டப் பிரிவுகளுக்கு 3 மாதங்கள் தண்டனை அல்லது அபராதம்அல்லது இரண்டும் ஆகும். சம்பவம் குறித்து முழு உண்மையும் உள்ளடக்கிய புகார் அளிக்காததாலும், காவல்துறை பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகார் பெற்று வழக்குப் பதியாததாலும் சாதாரண சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. 

4) சம்பவம் நடந்த 11.01.2025 அன்று, இரவு 10 மணிக்குப் பாதிக்கப்பட்ட மாணவி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றுள்ளார். அப்போது சம்பவம் குறித்து மாணவி கூறியதன் அடிப்படையில் மருத்துவர்கள் எம்.எல்.சி. (Medico Legal Case) ஆக பதிவு செய்ததோடு, "அடையாளம் தெரியாத 4 பேர் தாக்கியதாக (Assault by four unknown persons)" என்றும் குறிப்பிட்டுள்ளனர். உடனடியாக காலாப்பட்டு காவல்நிலையப் போலீசாருக்கு முறைப்படி தகவல் (Intimation) அளித்துள்ளனர். ஆனால், காலாப்பட்டு போலீசார் உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது. மேலும், வழக்கில் மாணவி தாக்கப்பட்டதற்கான சட்டப் பிரிவுகள் சேர்க்கவில்லை. இதுகுறித்து  குழுவினர் சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ் பி.யிடம் முறையிட்ட போது பி.என்.எஸ். பிரிவுகள் 115(3) தாமாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல், 118  காயம் ஏற்படுத்துதல் அல்லது கொடும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளை வழக்கில் சேர்த்துள்ளதாக கூறினார்.

5) பாதிக்கப்பட்ட மாணவி சிறுமி என்று தெரிந்தும் பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும் வயதை  மறைத்துள்ளனர். மேலும், சிறுமி மீதான குற்றங்களை காவல்துறையினர் நேரடியாக விசாரிக்க கூடாது. குழந்தைகள் நலக் குழுதான் (Child Welfare Committee) விசாரிக்க வேண்டும். பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் குழந்தைகள் நலக் குழுவிற்குப் புகார் அளித்திருக்க வேண்டும். அக்குழு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்று காவல்துறைக்குப் புகார் அளித்திருக்க வேண்டும்.

6) இச்சம்பவம் நடந்த உடனேயே காவல்துறைக்குப் புகார் அளிக்காதது குறித்து கேட்ட போது பல்கலைக்கழகத் துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் ஆகியோர் விடுமுறை என்பதாலும், குழு அமைத்து விசாரித்து புகார் அளித்ததாக கூறியது ஏற்புடையதல்ல.  மேலும், மாணவியின் உடலில் காயங்கள் இருந்தது என்பதைக் கூறிய பல்கலைக்கழக துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் ஆகியோர் மாணவி தாக்கப்பட்டது பற்றி புகாரில் தெரிவிக்காதது ஏன் என்று தெரிவிக்காமல் மழுப்புகிறார்கள். 

7) பல்கலைக்கழக நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் இச்சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சி தொடக்கம் முதலே இருந்துள்ளது. இச்சம்பவம் வெளியே தெரிந்தால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் போல் பரபரப்பாகி அரசுக்குக் அவப்பெயர் வந்துவிடும் என மூடிமறைக்க முயற்சி செய்துள்ளனர் என்று மட்டும் தெரிய வருகிறது.

8) 2500 மாணவ, மாணவியர் பயிலும் பல்கலைக்கழகப் பாதுகாப்பிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. போதிய செக்யூரிட்டி ஆட்கள் நியமிக்கப்படவில்லை. போதிய சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படவில்லை. வெளியாட்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளே வர எவ்வித கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை. பல்கலைக்கழக மதில்சுவர்கள் உடைந்து, அதன் வழியாகவும் வெளியாட்கள் உள்ளே வந்துள்ளனர்.  தற்போது இச்சம்பவம் நடந்த பின்னர்தான் செக்யூரிட்டி ஆட்கள் கூடுதலாக  நியமிக்கவும், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் அரசிடம் அனுமதி கோர உள்ளதாகவும், உடைந்த மதில்சுவர்களைச் சரி செய்ததாகவும் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் ஆகியோர் எங்கள் குழுவினரிடம் தெரிவித்தனர்.

கோரிக்கைகள்:

1) மாணவி சிறுமி என்பதால் குழந்தைகள் நலக் குழுவிற்கு உரிய புகார் அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெற்று, அதன் அடிப்படையில் வழக்கில் போக்சோ சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியிடம் நீதித்துறை நடுவர் மூலம் வாக்குமூலம் பெற அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

2) சம்பவம் நடந்த 11.01.2025 அன்று இரவே கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் இருந்து தகவல் வந்தும் பாதிக்கப்பட்ட மாணவிடம் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்யாதது பற்றி விசாரிக்க வேண்டும். 

3) பாதிக்கப்பட்ட மாணவி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லைஎன்றும், வழக்கு வேண்டாம் என்று கூறுகிறார் எனவும் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரும், காவல்துறை அதிகாரிகள் கூறுவது ஏற்புடையதல்ல. மாணவிக்கு உரிய மனநல கவுன்சிலிங் அளித்து, வழக்கு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு பெற வேண்டிய குழுப் பொறுப்பு அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமியான மாணவி வழக்கு விசார்ணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அரசும், காவல்துறையும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

4) இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனே கைது செய்ய வேண்டும். 

5) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் போதிய செக்யூரிட்டி ஆட்களை நியமிக்க வேண்டும். போதிய சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். சுற்று மதில்சுவர் முழுமையாக கட்ட வேண்டும். வெளியாட்கள் தேவையில்லாமல் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். 

6) புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ளதுபோல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்புக்குக் காவலர்களைப் பணியில் நியமிக்க வேண்டும். 

7) பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம் மற்றும் மனநல கவுன்சிலிங்கும் அளிக்கப்பட வேண்டும்.

8) பல்கலைக்கழக சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், உள்துறை அமைச்சர், தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர்,  காவல்துறை தலைமை இயக்குனர்(DGP)ஆகியோர் உரிய விளக்கத்தைப் பொதுமக்களுக்கு வெள்ளை அறிக்கையாக அளிக்க வேண்டும்-சட்டமன்ற உறுப்பினர் நேரு மற்றும் பொதுநல அமைப்புகளின் உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

University student charged with assault Action needed in POCSO case Fact-finding committee urges!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->