பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது - சசிகலா அறிக்கை..!
V Sasikala Statement
திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதிலாக ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு , தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதிலாக ஏமாற்றத்தை அளித்திருப்பதாக பொதுமக்கள் வேதனை . திமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு என்று சொல்லி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,297 கோடி மதிப்பில் , மஞ்சப்பையோடு சேர்த்து 21 வகையான பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது .
இதனைப் பார்த்து மக்களும் ஆர்வத்தோடு ரேஷன் கடைகளுக்கு உடனே சென்று வாங்கினர் . ஆனால் , பரிசுத் தொகுப்பு அடங்கிய மஞ்சப்பை கையில் கிடைத்தவுடன் , பொருள்களின் தரத்தைப் பார்த்த பிறகு பெரும் ஏமாற்றம் அடைந்ததாக வேதனை தெரிவிக்கிறார்கள் . அதாவது , புழுவுடன் உள்ள அரிசி , வெல்லம் என்ற பெயரில் பிசின் போன்று பார்ப்பதற்கே அருவறுக்கத்தக்க வகையில் ஒரு பொருளை , பிளாஸ்டிக் கவரில் அடைத்து கொடுத்ததைப் பார்த்தவுடன் மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து காணப்படுகிறார்கள் .
அதாவது இந்த 21 பொருள்களின் இன்றைய சந்தை விலையை கணக்கிட்டு பார்த்தாலே ரூபாய் 400 தான் வருகிறது . ஆனால் தமிழக அரசு மொத்தமாக கொள்முதல் செய்யும்போது இதன் அடக்க விலை இன்னும் கூட குறைவாக இருக்கலாம் . ஆனால் , அரசு வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி பார்த்தால் 21 பொருள்களின் விலை ரூபாய் 603.25 என்று வருகிறது . இதில் உள்ள வித்தியாசமே ஒரு பையிக்கு ரூபாய் 203.25 இருக்குமேயானால் , 2.15 கோடி பைகளுக்கு , ரூபாய் 436 கோடியே 98 லட்சம் மக்கள் வரிப்பணம் எங்கே போனது என்று சாமானிய மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
மேலும் , ஒரு சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு பண்டக சாலைகளில் தரப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புப் பைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 21 பொருள்களும் இல்லாமல் , குறைவான பொருள்களோடு கொடுத்துள்ளதாக மக்கள் குறை கூறுகிறார்கள் . அதாவது , நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் , இது போன்ற பரிசுத் தொகுப்புகள் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள் .
தொகுப்பைப் தமிழக மக்கள் , புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை மனதில் வைத்து பொங்கல் பெறுவதற்கு ரேஷன் கடைகளுக்கு வந்துள்ளதாகவும் , பெறப்பட்ட பொருள்களின் தரத்தையும் , சில பொருள்கள் இல்லாமல் போயிருப்பதையும் பார்க்கும்போது நடப்பது திமுக ஆட்சி என்று நினைவுக்கு வருவதாகவும் சொல்லி மக்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள் .
மேலும் , இந்த கொரோனா காலத்தில் ஏற்கனவே சரியான வருமானமும் இல்லாமல் தவிக்கும் ஏழை - எளியவர்களும் , மழை வெள்ளத்தால் வேளாண் பயிர்களை இழந்து எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நடத்துவது என்று புரியாமல் தவிக்கும் விவசாயிகளும் , இது போன்ற தரம் குறைந்த பொருள்களை வைத்து , வருகின்ற பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடுவது என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் .
இது போன்று , 2.15 கோடி பைகளுக்கு 21 பொருள்களை பாக்கெட் போட்டு கொடுப்பதால் கால விரயம் மற்றும் பயனாளிகளுக்கு முறையாக அனைத்து பொருள்களும் போய் சேராமல் மக்கள் வரிப்பணம் வீணாகிறது . அதற்கு பதிலாக தொலைநோக்கு பார்வையோடு அரிசி , சர்க்கரை , கரும்பு போன்ற பொருள்களோடு பண்டிகைக் கால கூடுதல் செலவுகளை சமாளிக்கும் வகையில் , மக்களிடம் நிதி நிலைமையை எடுத்து சொல்லி , குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுத்து இருந்தால் , ஏழை - எளியவர்கள் , விவசாயிகள் , ஆங்காங்கே இருக்கின்ற சிறு வியாபாரிகள் போன்ற அனைவருக்கும் அது பயனுள்ளதாக அமைந்திருக்கும் .
தற்போது , கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக சொல்லி தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது . இது போன்றதொரு இக்கட்டான காலகட்டத்தில் தமிழக மக்கள் , உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை எந்தவித சிரமமின்றி மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் , தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்