தனியார் பள்ளியில் வாயு கசிவு - 2 வது நாளாக அதிகாரிகள் சோதனை..!
officers search for second day in chennai private school gas leak issue
சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 26-ந் தேதி ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டது.
இதையடுத்து மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதன் காரணமாக கடந்த 1 வாரம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.
ஆனால் ரசாயன வாயுகசிவு குறித்து மாவட்ட கல்வி துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. அதுமட்டுமல்லாமல், சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏதும் கூறவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென்று ஒன்பது மாணவிகள் மயக்கம் அடைந்ததால், மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் தான் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், மருத்துவத்துறை அதிகாரிகள், மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை ஆணையர் ரவிகட்டா தேஜா அதிகாரிகளுடன் பள்ளியை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தி வருகிறது.
English Summary
officers search for second day in chennai private school gas leak issue