உயிருக்கு அச்சுறுத்தல்.. கை துப்பாக்கி வழங்க வேண்டும்.. விஏஓ சங்கத்தினர் கோரிக்கை..!!
VAO association has demanded handgun for threat to life
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நேர்மையான அரசு அதிகாரிகள் மீது எழுந்துள்ள அச்சுறுத்தலதால் பல அரசு அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் தூத்துக்குடி மாவட்டத்தில் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலர்படுகொலை செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே தமிழக அரசின் சிறந்த கிராம நிர்வாக அலுவலர் விருது பெற்ற அருப்புக்கோட்டை களக்காரி கிராம நிர்வாக அலுவலர் துரை பிரித்திவிராஜ் என்பவர் தன் பணியை நேர்மையாக செய்ய இயலவில்லை என்பதால் வேலையை ராஜினாமா செய்துள்ளார்
தமிழகத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்திப்பது அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசு அலுவலர்கள் பணிக்கு செல்வதில் ஒருவித தயக்கமும் பயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும்.
தேவைப்படும் பட்சத்தில் துப்பாக்கி வழங்க பரிசீலனை செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் ஊருக்கு ஒதுக்கப்புறமாக உள்ளதால் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ஆட்சியர்கள், வருவாய் கோட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் பொழுது உடனடியாக பரிசீலனை செய்திட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல்துறையினரின் மெத்தன போக்கால் அரசு அதிகாரிகளே கைதுப்பாக்கி கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
VAO association has demanded handgun for threat to life