சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? கொந்தளித்த அன்புமணி! - Seithipunal
Seithipunal


சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி  ரத்து செய்யப்பட்ட  அவற்றின் குடிப்பக உரிமங்கள்  48 மணி நேரத்திற்குள்ளாக  மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.  மக்களின் இன்றியமையாத தேவைகள் தொடர்பான விவகாரங்களில்  முடிவெடுப்பதில் எல்லையில்லா கால தாமதம் செய்யும் தமிழக அரசு, நட்சத்திர விடுதிகளுக்கு குடிப்பக உரிமம் வழங்குவதில் மட்டும்  இவ்வளவு வேகமும், ஆர்வமும் காட்டியது மர்மமாக உள்ளது.

சென்னையிலுள்ள தனியார் 5 நட்சத்திர விடுதிகளில் அமைந்துள்ள குடிப்பகங்களில், அந்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சர்ச்சைக்குரிய  விடுதிகளில்  வெளியாட்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவற்றின் குடிப்பக உரிமங்கள் கடந்த சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை சரியானது தான்.

ஆனால், அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக ரத்து செய்யப்பட்ட குடிப்பக உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? குடிப்பகங்களில் எந்த விதிமீறலும் நடக்கவில்லையா?  அல்லது மது வணிகம் என்பது  ’தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் ஒரே வழி’ என்பதால்  நட்சத்திர  விடுதிகளின் குடிப்பகங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதா? என்பது குறித்து தமிழக அரசு தான் விளக்கமளிக்க வேண்டும்.

ஐந்து நட்சத்திர விடுதிகளில் மட்டுமின்றி, சென்னையிலும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும்  ’’கிளப்”களிலும் உறுப்பினர் அல்லாதவர்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு  மது வழங்கப்படுகிறது. இதுவும் விதிமீறல் தான். தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுவரையிலும் கூட மது வணிகத்தில் எந்த விதிமீறலையும் அனுமதிக்கக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் மது வணிகத்தில் விதிகளை மீறும் அனைத்து கிளப்கள் மற்றும் விடுதிகளின்  குடிப்பக உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is the secret behind canceled liquor licenses of private star hotels in Chennai being restored within 48 hours Anbumani


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->