உலகத் தாத்தா போப் பிரான்சிஸ் மறைந்தார்!
Pope Francis vatican
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், உலகத் தாத்தா என அறியப்படும் போப் பிரான்சிஸ் இன்று காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடிகன் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று காலை 7:35 மணிக்கு ரோம் பிஷப்பாக இருந்த பிரான்சிஸ் தந்தையின் வீடு சேர்ந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கும் திருச்சபைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட சேவையாக இருந்தது” என்று தெரிவித்தார்.
88 வயதான போப்புக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் சுவாசக் கோளாறுகள் காரணமாக உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 38 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர், மார்ச் 23 அன்று அவர் வாடிகனுக்கு திரும்பினார்.
கடந்த வாரம் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய நேரத்தில், புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறே அவர் கையசைத்து வாழ்த்து தெரிவித்த சம்பவம், அவரது இறுதி பொதுமறைவு எனும் வகையில் திருச்சபை வட்டாரத்தில் குறிப்பிடப்படுகிறது.
போப்பின் மறைவு உலக கத்தோலிக்கர்கள் மத்தியில் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அவரது வாழ்வு, சாதனை, சேவைகள் அனைத்தும் உலக மதத்தலைவர்களிடமும், சமூக சேவைகளிலும் தனிச்சிறப்பாகக் குறிப்பிடப்படும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.