டொனால்ட் டிரம்பின் அரசு நிர்வாக கொள்கைக்கு கடும் எதிர்ப்பு; ‘50501' மக்கள் போராட்டம்..!
Strong opposition to Donald Trump government administration policy 50501 people protest
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசு நிர்வாக கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் 50 இடங்களில் ‘50501’ என்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ட்ரம்ப் நிர்வாகத்தில் அவர் எடுக்கும் கொள்கை முடிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இதை முக்கியமாக புலம்பெயர்ந்தோர் விவகாரம், அரசுத்துறை மறுசீரமைப்பு, எலான் மஸ்கின் தலைமையிலான திட்டங்களுக்கு எதிர்ப்பு, சர்வதேச நாடுகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு, கல்வி, சமூக பாதுகாப்பு, மற்றும் பொது சுகாதாரத்திற்கான நிதி குறைப்பு போன்ற விவகாரங்களுக்கு எதிராக அமெரிக்காவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ‘Hands Off’ என்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக ‘50501’ என்ற அமைப்பின் சார்பில் நேற்று முதல் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும், டிரம்பின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தற்போது ‘50501’ (50 போராட்டங்கள், 50 மாநிலங்கள், ஒரு நாள்) என்ற போராட்டக் குழுவின் சார்பில் 50 மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையால் பங்குச் சந்தைகள் சரிவடைந்து, $5.4 டிரில்லியன் மதிப்பை இழந்தன. இதனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், ‘போராட்டங்களால் டிரம்பை நிர்வாக நடவடிக்கையை தடுக்க முடியாது. அவர் மக்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், டிரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக 170-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பல உத்தரவுகளுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Strong opposition to Donald Trump government administration policy 50501 people protest