அதிர்ச்சியில் திரையுலகம் - இளையராஜா மக்களின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!
cm stalin condoles to ilaiyaraja dayghter bavatharani death
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தங்களது இறங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி அவர்கள், தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே இரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார்.
![](https://img.seithipunal.com/media/mks 2024g-3jyqc.jpg)
கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
cm stalin condoles to ilaiyaraja dayghter bavatharani death