ஆஸ்கர் விருதுக்கு 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 'எமிலியா பெரெஸ்' திரைப்படம்..!
Emilia Perez has been nominated in 13 categories for the Oscars
பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய 'எமிலியா பெரெஸ்' என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. அதன்படி 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 02-ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் 97-வது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் 'எமிலியா பெரெஸ்' திரைப்படம் அதிக பிரிவுகளில் தேர்வாகி கவனம் பெற்றுள்ளது.
அதாவது, சிறந்த திரைப்படம், இயக்கம், கதாநாயகி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, சர்வதேச திரைப்படம், பாடல், துணை நடிகை, தழுவப்பட்ட திரைக்கதை, இசையமைப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இன்று ஆஸ்கர் அகாதெமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. திருநங்கையான கர்லா சோபியா காஸ்கன் சிறந்த நடிகை பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். திருநங்கை நடிகை ஒருவர் சிறந்த நடிகை பிரிவில் முதல் முறையாக ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளார். மேலும் அதிக பிரிவில் பரிந்துரையான ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் இதுவாகும்.
எமிலியா பெரெஸ் படத்துக்கு அடுத்தபடியாக அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஜான் எம். சூ இயக்கிய விக்டு திரைப்படம் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பிராடி கார்பெட் இயக்கிய தி புரூட்டலிஸ் திரைப்படமும் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படங்கள் பிரிவில் அனோரா,தி புரூட்டலிஸ்ட், எ கம்ப்ளீட் அன்நோன், கான்கிளேவ், டுன் -2, ஐ ஆம் ஸ்டில் இயர், நிக்கல் பாய்ஸ், விக்டு ஆகியவை பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Emilia Perez has been nominated in 13 categories for the Oscars