பிளாக் பஸ்டர் டிக்கிலோனா.. சந்தானத்தை வீழ்த்த நினைத்தவர்களுக்கு சவுக்கடி கொடுத்த மக்கள்..! - Seithipunal
Seithipunal


நடிகர் சந்தானம் நடிப்பில் நேற்று ஜீ தமிழ் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகிய திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானத்திற்கு நாயகியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் யோகி பாபு, ராஜேந்திரன், முனீஷ் காந்த், மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரும் நடித்து இருக்கின்றனர். கெளரவ தோற்றத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்  ஹர்பஜன் சிங் அவர்களும் நடித்துள்ளார். 

இந்த படத்தை கே.ஜெ.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தியான நேற்று டிக்கிலோனா திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

டைம் மெஷின் என்ற அடிப்படையை வைத்து பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், இந்த திரைப்படம் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் தனது திருமண வாழ்க்கைக்கு பின்னர், தான் சந்திக்கும் துயரங்களை நினைத்து தனது திருமணத்தையே தடுத்து நிறுத்தி மற்றொரு பெண்ணை திருமணம் செய்யும் நிலையில், அதன் பின் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் தனது காதலியின் முக்கிய தருணங்களை கேட்க மறுத்து செய்த விஷயம், இறுதியில் அவன் எப்படி யாரை திருமணம் செய்கிறான் என்பதே படம்.

மேலும், 90 கிட்ஸ் பெண்ணிற்கும், 2 கே கிட் மனநிலையில் வளரும் பெண்ணுக்கும் உள்ள சின்னசின்ன வித்தியாசங்கள், அவர்களின் மனநிலைகள் என்று இன்றளவு நடக்கும் பிரச்சனைகளை தெளிவுபட நுணுக்கத்துடன் காண்பித்து சிரிக்கும் காட்சிகளில் சிரிக்க வைத்து, தனது முடிவின் தவறால் ஏற்படும் விஷயங்களில் மனதை கரைய வைத்து இருக்கிறார் இயக்குனரும், நடிகர் சந்தானமும். 

இன்றளவில் காதல் வயப்படாத நபர்கள் யார் என்று தேடினால் விரலை விட்டு எண்ணிவிடலாம். சிலருக்கு காதலித்தவருடன் வாழ்க்கை அமையும், சிலருக்கு அதில் மாற்றங்கள் இருக்கும். எதோ ஒரு சூழ்நிலையில் காதலை உதறிவிட்டு சென்று மற்றொரு நபரை திருமணம் செய்து வாழ்தல் என்ன நிலைக்கு அழைத்து செல்லும், அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் கண்முன்னே நிறுத்தி பலரையும் யோசிக்க வைத்தார்கள். இந்த படம் திரையரங்கில் வெளியாகி இருந்தால், குடும்பத்தோடு சென்று சிரித்து மகிழ்ந்து பார்க்க வேண்டிய திரைப்படமாக இருந்திருக்கும். அமோக வெற்றியும் அடைந்து இருக்கும். ஓ.டி.டியில் டிக்கிலோனா ஆகியிருந்தாலும், சந்தானம் படத்திற்கென உள்ள வெற்றி என்பது மீண்டும் உறுதி செய்பட்டுள்ளது.

டிக்கிலோனா - ஓ.டி.டி ரிலீஸ் ஏன்?. 

தற்போது கொரோனா பரவலால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், திரையரங்குகள் திறக்கப்பட்டு உள்ளது. டிக்கிலோனா திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், ஜீ தமிழ் நிறுவனம் அதனை வாங்கி தனது ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்தது. களநிலவரப்படி இந்த படம் திரையரங்கில் வெளியாகி இருந்தால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை அறிந்த சிலர், அதனை வேண்டும் என்றே தங்களுக்கு தெரிந்த மேலிட நபர்களை வைத்து பேசி இருக்கின்றனர். ஏனென்றால் அவர்களின் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற வன்மம். 

சந்தானத்தின் திரைப்படங்களில், அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கி, அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக இருந்துள்ள டிக்கிலோனா திரைப்படம் ஓ.டி.டி தளத்திலோ அல்லது பிற வகையிலோ மக்களால் பார்க்கப்பட்டு வெகுவாக ரசிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆதங்கம் படத்தை திரையில் ரிலீஸ் செய்திருந்தால், குடும்பத்தோடு சென்று பார்த்து சிரித்து மகிழ்ந்து, ஊரடங்கு மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்திருப்போம் என்பது தான். 

நடந்தது என்ன?.

திரையரங்கில் தலைவி படம் ரிலீஸ்.. எதிர்பார்த்த வசூல் பெறாவிட்டாலும், படம் தமிழக மக்களின் நீங்க நினைவுகளில் இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதையம்சம் கொண்டது என்பதால் அதனை பலரும் பார்ப்பார்கள். விஜய் சேதுபதியின் இலாபம் படம் ரிலீஸ். இலாபம் திரைப்படம் விவசாய பூமியை காப்பாற்ற நினைக்கும் நபரின் போராட்டம். கதையம்சம் விவசாயிகளுக்கான புரட்சி. ஆனால், அவர்களின் கற்பனை புரட்சி மக்கள் மத்தியில் எடுபடவில்லை. விஜய் சேதுபதிக்கு தேவையில்லாத அல்லது தவிர்த்திருக்க வேண்டிய படம். 

மூன்றாவது திரைப்படமாக விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர். சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கிய காலங்களில் அவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது, ரஜினி ரசிகர்களின் பக்கபலத்தால். காலப்போக்கில் சாதாரண படங்களில் நடித்து அதனை சிறுவர்களுக்கு பிடித்தார் போல வெற்றிப்படமாக்கிய சிவகார்த்திகேயன், ரஜினியை கலாய்ப்பது போல காட்சிகளில் நடித்து தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அவர் நடித்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. 

விஜய் சேதுபதியின் இலாபம் படமும், விரைவில் வெளிவரப்போகும் டாக்டர் படமும் செய்த அரசியலால், அவர்களின் சுய இலாபத்திற்காக, அவர்கள் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற வன்மத்திற்காக, சந்தானம் திரையுலகில் அடுத்த போட்டி இடத்திற்கு வந்துவிட்டால், நமக்கு பட வாய்ப்புகள், நமது மார்க்கெட் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்து, பல உருட்டல்கள் செய்து டிக்கிலோனா ஓ.டி.டி தளத்திற்கு ரிலீஸ் செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளது என விபரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். 

நீயும் ஒரு நாயகன், நானும் ஒரு நாயகன்.. படம் பிடித்திருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள். இதில் ரஜினியாகவே இருந்தாலும், கமலாகவே இருந்தாலும், விஜயாகவே இருந்தாலும் விஷயம் ஒன்று தான். நிலைமை இப்படியிருக்க மூச்சுக்கு முன்னூறு முறை வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வந்தேன் என்று மேடைக்கு மேடை பேசும் இலாப நடிகரும், டாக்டர் நடிகரும் மற்றொரு நடிகரின் வளர்ச்சியை வேண்டும் என்றே திட்டமிட்டு தகர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

கர்மா.

டாக்டர் திரைப்படம் தற்போதுள்ள சூழ்நிலையில் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் நிலையில், அது வெளியானதும் பின்னர் தான் வெற்றியா? தோல்வியா? தெரியவரும். அந்த வகையில், சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படம் ஓ.டி.டியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், சந்தானத்தின் வளர்ச்சியை வீழ்த்திவிடலாம் என்ற எண்ணம் இருந்தால், அது எதிர் தரப்புக்கு மற்றொரு பெரிய இழப்பை தான் தரும். திரையுலகை பொறுத்த வரையில் எழுதப்படாத விதிமுறை ஒன்று உள்ளது. அதனை அறிந்தவர்கள் இவர்களை போல வீணான புரட்சி, தன்னை வளர்த்து விட்டவர்களையே எதிர்த்து பேசுவது அல்லது வளர்ந்துவிட்டோம் என்ற பாணியில் திமிராக செய்யப்படுவது போன்றவற்றை செய்யமாட்டார்கள். அப்படி செய்ததால் அவர்களின் நிலை உயர்வது போல தோன்றினாலும், அது வீழ்ச்சிக்கே போகும். அது பல திரையுலக நடிகர்கள் முதல் துணை கதாபாத்திர நடிகர்கள் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அவர்களும் அறிவார்கள். 

சந்தானம் எடுக்க வேண்டிய முடிவு என்ன?.

திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகனாக உருவாகி வரும் சந்தானத்திற்கென தனியொரு ரசிகர் கூட்டம் உள்ளது. சந்தானம் திரைப்படத்திற்கு சென்றாலே சிரித்து மன அழுத்தத்தை குறைக்கலாம் என்ற எண்ணம் இன்னும் மக்களிடையே உள்ளது. நாயகனாக நடித்ததால் சிரிப்பில் இருந்து விடை தருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், எனக்கு அடிக்கவும், ஆடவும் தெரியும். அனைவரையும் பழைய பாணியில் சிரிக்க வைக்கவும் தெரியும் என உணர்த்தி இருக்கிறார். 

இத்தனை நாட்கள் காத்திருந்ததை போல இன்னும் சில காலம் காத்திருந்து படத்தை வெளியிட்டு இருக்கலாம். தயாரிப்பாளரின் நெருக்கடியால் ஒருசில விஷயங்கள் கைகூடாமல் போகவும் செய்திருக்கலாம். அன்றைய காலத்தில் கவுண்டமணி-செந்தில், வடிவேலு ஆகியோர் எந்த படத்தில் நடித்திருந்தாலும் அதனை பார்க்க பலரும் செல்வார்கள். காரணம் ஒன்று தான் சிரிப்பு.. கவுண்டமணி - செந்தில், வடிவேலுவின் காலங்களுக்கு பின்னர் அந்த இடத்தை இன்றளவும் தக்க வைத்திருக்கும் நடிகர் சந்தானம் மட்டுமே. சந்தானத்தை போன்று பல நடிகர்கள் இருந்தாலும், சந்தானத்திற்கென மறுக்க முடியாத இடம் உள்ளது. 

சந்தானத்திற்கு அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களும் ஓ.டி.டி தளத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. டிக்கிலோனா திரைப்படம் ஓ.டி.டியில் ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டது என்பதால், அடுத்தடுத்த படங்களும் ஓ.டி.டிக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ரிலீஸ் செய்யும் அனைத்து படமும் வெற்றிப்படமாகிடாது. வெற்றிப்படம் என தெரிந்த படங்களை கட்டாயம் திரையரங்கில் ரிலீஸ் செய்ய இனி சந்தானம் முயற்சிக்க வேண்டும்.

சந்தானம் என்ற நாயகனை ஆதரிக்க ரசிகர்கள் என்ற படையிருக்க, பயம் எதற்கு?. சோதனைகளை கடந்து சாதனையாக்கி சரித்திர நாயகனாக சந்தானம் கட்டாயம் உயருவார் என அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

"வன்ம எண்ணம் கொண்டவர்கள் அவர்களின் எண்ணத்தால் அழிவார்கள். அது இயற்கையின் நியதி". 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why Dikkiloona Movie Release on OTT in Cinema Industry Have Indirect Politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->