அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஜேஇஇ வகுப்பு - எப்போது தெரியுமா?
JEE free classes start to government school students
அரசுப் பள்ளி மாணவர்களில் ஜேஇஇ தேர்வெழுத விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 26 முதல் ஜனவரி 20-ம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இந்த பயிற்சி அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதன்படி கணிதம், வேதியியல், இயற்பியல் குறித்த அறிமுகப் பயிற்சிகள் டிசம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலை 9 முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும்.
இதைத் தொடர்ந்து அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2 முதல் 20-ம் தேதி வரை தேர்வுக்கான பாடங்கள் குறித்து தினமும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
JEE free classes start to government school students