மாணவர்களின் கற்றல் திறன் குறைபாடுகளை போக்கி கல்வியை ஊக்குவிக்க திட்டம் வகுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.!
Plan to promote students education
கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டன. தொற்று பரவல் குறையும் பொழுதெல்லாம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலான நேரங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டே இருந்தன.
இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் சிக்கல் நீடித்து வந்தது. மாணவர்களுக்கு Knowledge loss அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது. பள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடும் ஏற்பட்டு வருவதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்தன. மாநில அரசுகளும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க திட்டம் வகுக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையாமல் இருக்கவும், அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் இடை நிற்றல் எனப்படும், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடுவதை தடுக்கவும் "கற்றல் மீட்சித் திட்டம்" என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, தொடக்க, மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிதுபுதவி, 25 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் வாங்குவதற்கு நிதி மற்றும் வாய்வழி வாசிப்பு சரளமாக வருவதற்கு தனி வகுப்புகள் நடத்துவதற்கு மாநிலங்களுக்கு தலா 20 லட்சம் நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்கும், கற்றலின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களின் கற்றல் திறனை மீட்டெடுக்க திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Plan to promote students education