77 நாடுகள்; 118 பேர் கொண்ட தூதரகக் குழு; மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராட்டியுள்ளனர்..!
77 foreign ambassadors took holy dip in the Triveni Sangam
உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில் 77 நாடுகளின் தூதர்கள் 118 பேர் இன்று திரிவேணி சங்கமம் புனித நீராடியுள்ளனர்.
அங்கு பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 03 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26 வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த புனித நீராடும் நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 77 நாடுளின் தூதர்கள் மகா கும்பமேளாவில் இன்று கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து வெளிநாட்டு துாதர்கள் கூறியதாவது:
இந்தியாவுக்கான ஸ்லோவாக் தூதர் ராபர்ட் மாக்சியன் கூறுகையில், 'நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த மகத்தான ஆன்மிக நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக அரசுக்கு வாழ்த்துக்கள். அமைதி, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனால், இந்த நாள் மிகவும் அழகான நாளாக மாறி உள்ளது. நான் இந்தியாவின் ரசிகன். இந்தியாவின் வரலாறு, கலாசாரம், யோகா உள்ளிட்டவற்றை நான் நேசிக்கிறேன். இந்தியா எனது இரண்டாவது வீடு போன்றது' என்று கூறியுள்ளார்.
அடுத்ததாக, அர்ஜென்டினா தூதர் மரியானோ கௌசினோ கூறுகையில், 'இந்த முக்கியமான விழாவில் பங்கேற்று மரபுகளைப் பின்பற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.
மேலும், ஜிம்பாப்வே தூதர் ஸ்டெல்லா நொகோமோ கூறுகையில், 'இது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். இது இந்தியாவை ஆழமாகப் புரிந்துகொள்ள முயலும் ஒரு கலாசார ராஜதந்திரம். எங்களை வரவேற்ற உத்தரபிரதேச மாநிலத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.
அத்துடன், பொலிவியா துாதர் கிறிஸ்டியன் வில்லாரியல் கூறுகையில், 'ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தீபாவளிக்கு அழைக்கப்பட்ட பாக்கியம் எனக்கு கிடைத்தது, ஆனால் இந்த சந்தர்ப்பத்துடன் ஒப்பிட எதுவும் இல்லை. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இதுபோன்ற நிகழ்வை என் மகன்களால் கூட பார்வையிட முடியாது' என்று கூறியுள்ளார்.
இதேவேளை, இன்று பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா நிகழ்வில் 54 லட்சம் பேருக்கும் அதிகமான பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட்டியுள்ளதாக உத்தரப் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
77 foreign ambassadors took holy dip in the Triveni Sangam