கடவுள்தான் இனி டெல்லியை காப்பாற்ற வேண்டும் - ஆம் ஆத்மி கட்சியில் வெடித்தது பூகம்பம்!
AAP Swati Maliwal Atishi
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனையுடன் ஜாமினில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
இதற்கிடையே இன்று காலை 11 மணியளவில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டார். மேலும் இன்று மாலையே அவரும் ஆளுநரை சந்தித்து ஆட்சிக்கு உரிமை கோரியுள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷியை, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கடுமையான எதிர்ப்பையும், விமர்சனத்தையும் முன் வைத்திருப்பது, டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மலிவாள் தான் தற்போது இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் சமூக வலைதள பக்கத்தில், "இந்த நாள் டெல்லிக்கு மிக சோகமான நாள். பயங்கரவாதி அப்சல் குருவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற நீண்ட போராட்டம் நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த பெண் டெல்லி முதல்வராக்கப்படுகிறார்.
அதிஷி குடும்பத்தை பொறுத்தவரை அப்சல் ஒரு நிரபராதி. மேலும், அப்சல் குரு மீதானது அரசியல் சதியால் போடப்பட்ட பொய் வழக்கு. அதிஷி வெறும் டம்மி முதல்வர்தான். கடவுள்தான் டெல்லியை காப்பாற்ற வேண்டும்" என்று ஸ்வாதி மலிவாள் தெரிவித்துள்ளார்.