கள்ளக்குறிச்சி விவகாரம் - காங்கிரஸ் தலைவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கடிதம்.! - Seithipunal
Seithipunal


பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

"பாஜக தேசிய தலைவர் என்றில்லாமல் ஒரு இந்தியனாக மிகுந்த கனத்த இதயத்துடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், உயிரிழந்தோரின் உடல்கள் எரியும் இறுதிச்சடங்குகளின் கொடூரமான படங்கள் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியது. இதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பாஜக, உணர்வுப்பூர்வமான கட்சியாக இருப்பதால், இந்த துக்க காலத்தில் அந்த மக்களுக்கு முழு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், துயரத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகுந்த ஆதரவை வழங்கி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம், முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒருவேளை தி.மு.க. - இந்தியா கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான கும்பலுக்கும் இடையே தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால், உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். கடந்த ஆண்டு மே மாதமும் 23 பேர் சட்டவிரோத மதுவை உட்கொண்டு பலியாகினர். அந்த நேரத்தில் பாஜக இதனை எச்சரித்தது. கடந்த 2021-ம் ஆண்டு உள்பட கடந்த காலங்களில் தி.மு.க. - இந்தியா கூட்டணி மதுவிலக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளன. ஆனால் அதற்கு முரண்பாடாக ஆட்சி உள்ளது.

கருணாபுரத்தில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். இவ்வளவு பெரிய பேரழிவு நடந்திருக்கும் நிலையில் உங்களது தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதில் அமைதியாக இருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நியாயம் என்ற முழக்கத்தை நீங்கள் உண்மையாக வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாழ்த்தப்பட்ட மக்களும், பிற மக்களும் உங்களிடம் இரட்டைவித பேச்சை பார்க்கிறார்கள்.

உங்கள் கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் காயங்களில் உப்பை தேய்க்கிறார். இவர்களைப் போன்றோரால் தாழ்த்தப்பட்ட மக்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். உங்களது வெற்று வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அநியாயத்தை நீக்காது.

இந்த தருணத்தில் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு செல்வதற்கும், அமைச்சர் முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் தமிழ்நாடு அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று பாஜக உள்பட ஒட்டுமொத்த தேசமும் கோருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக நாங்கள் கோருகிறோம்.

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் நேரில் சென்றோ அல்லது குரல் மூலமாகவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடக்கும் போராட்டத்தில் எங்கள் தலைவருடன் சேர உங்களை அழைக்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp national leader jp natta write letter to congrass leader mallikarjune karkhe for kallakurichi issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->