ஆப்ரேஷன் தாமரை.. "ரூ.50 லட்சம் பேரம் பேசிய பாஜக புள்ளி".. பரபரப்பில் கர்நாடக அரசியல்..!!
BJP Somanna negotiates with JDS candidate to withdraw nomination
கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் கர்நாடக பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கர்நாடக மாநில இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக அமைச்சர் சோமண்ணா பற்றி நேற்று புகழ்ந்து பேசி இருந்தார்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் சோமண்ணா கர்நாடக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போகிறார். கர்நாடகவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு இவர் பெரும் பங்கு வகிப்பார் தெரிவித்திருந்த நிலையில் சர்ச்சைக்குரிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநில வீட்டு வசதி அமைச்சராக இருக்கும் சோமண்ணா வருணா மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் சாம்ராஜ்நகர் தொகுதியில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் மல்லிகார்ஜுன சாமியை போட்டியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோமண்ணா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போட்டியிலிருந்து விலகினால் 50 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசினார் என மல்லிகார்ஜுன சாமி குற்றம் சாட்டியுள்ளார். சோமண்ணா வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி மல்லிகார்ஜுன சாமியை தொடர்பு கொண்டு பேசியது என குறிப்பிட்டு ஆடியோ ஒன்றும் கர்நாடகாவில் வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் ஆடியோவில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கார் வழங்குவதாகவும், தேவையான அனைத்தையும் செய்வதாகவும் மல்லிகார்ஜுன சாமிக்கு பாஜக அமைச்சர் சோமண்ணா ஆசைவார்த்தை கூறுவது போல் உள்ளது. பரபரப்பான கர்நாடக மாநில தேர்தலுக்கு மத்தியில் பரவும் இந்த வீடியோவால் பிரசார களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பல மாநிலங்களில் பாஜக தலைமை ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் பிற கட்சி எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கும் வகையில் கர்நாடகாவிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தி காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க இறங்கி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
English Summary
BJP Somanna negotiates with JDS candidate to withdraw nomination