டெல்லி மதுபான வழக்கு - தெலுங்கானா முதல்வர் மகளிடம் சி.பி.ஐ விசாரணை.!
CBCI investigation in telunga chief minister daughter kavitha for delli liquor case
டெல்லி மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசு, மதுபான கொள்கையை எளிதாக்கி, தனியார் மதுபானக்கடைகளுக்கு உரிய அனுமதியும், சலுகைகளும் அளித்ததில் பெரும் ஊழல் நடைபெற்று இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்த புகார் குறித்து சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கில் மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ்சிசோடியா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கு தொடர்பு உள்ளது என்று கடந்த ஆகஸ்டு மாதம் பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கவிதா மறுத்தார்.
இருப்பினும், இந்த வழக்கில் அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக, அந்த அறிக்கையில், "இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சரத் ரெட்டி, கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி உள்ளிட்டோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சித்தலைவர்களுக்கு விஜய் நாயர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த மாதம் 25-ந் தேதி சி.பி.ஐ. இந்த வழக்கில் ஏழு பேர் மீது தனது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்து, அவருக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீசில் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 11-ந் தேதி அதாவது நேற்று, அவரது வீட்டுக்கு நேரில் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று, ஐதராபாத் மாநிலத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு, டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தனர். அவர்கள் கவிதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதில்களையும் பெற்று அதிகாரிகள் பதிவு செய்தனர்.
சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை மாலை 6.30 மணிக்கு நிறைவுபெற்றது. அதன் பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டனர். இந்த விசாரணைக்காக கவிதா வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
English Summary
CBCI investigation in telunga chief minister daughter kavitha for delli liquor case