விசா கிடைக்க காலதாமதம்-மாணவர் தற்கொலை..!
Delay in getting visa-Student commits suicide..!
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்திரா மாவட்டத்தில் கோர்கா கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் விகேஷ் சைனி என்ற தீபக் (வயது 23). இவர், பட்டப்படிப்பு முடித்து கனடாவில் படிப்பை தொடர்ந்து, அந்த நாட்டிலேயே வாழ்க்கையை கழிக்க விரும்பியுள்ளார். கனடா செல்வதற்காக விசா பெற விண்ணப்பித்துள்ளார். ஆனால், தீபக்கிற்கு மாணவருக்கான விசா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் ஜன்சா நகர் அருகே உள்ள கால்வாய் ஒன்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். கால்வாயின் அருகே தீபக்கின் காலணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் கிடந்துள்ளது.
இத கண்டா அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து, மீட்பு பணியாளர்கள் கால்வாய்க்குள் இறங்கி அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனைக்கு பின் தீபக்கின் உடலை, குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், தீபக்கின் நண்பருக்கு மாணவர் விசா உடனடியாக கிடைத்து விட்டதாகவும், தீபக்குக்கு கிடைக்கவில்லை என்று நினைத்து விரக்தி அடைந்த தீபக், தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக என போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.
அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி கோர்கா கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் தீபக்கின் குடும்ப நண்பரான குர்னம் சிங் தெரிவிக்கும்போது, தீபக்கின் விசா கடந்த வியாழ கிழமையன்று வந்துள்ளது தெரியவந்தது.
ஆனால், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தீபக் காணாமல் போயுள்ளார். தீபக்கின் நண்பருக்கு கனடா செல்வதற்கான மாணவர் விசா வந்துள்ளது. ஆனால், தீபக்கிற்கு வருவதற்கு சற்று காலதாமதம் ஆகியுள்ளது. அவரது குடும்பத்தினரும் தங்களது மகனை கனடா நாட்டுக்கு அனுப்பி வைக்க விரும்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தீபக்கிற்கு ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவரது தந்தை அரசு பணியில் உள்ளார். அவரது குடும்பம் தீபக்கை இழந்த சோகத்தில் உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், மாணவர் விசா பெறுவதில் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பல்வேறு நாடுகளின் குடியுரிமை அலுவலகங்களும் மாணவர்களுக்கு தகவல்களை அனுப்பி வருகின்றன.
மத்திய வெளிவிவகார அமைச்சகம் இந்திய மாணவர்களுக்கு விசாக்களை எளிதில் கிடைக்க செய்வதற்காக ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, ஜெர்மனி, நியூசிலாந்து, போலந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மூத்த தூதர்களுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை நடத்தியுள்ளோம் என சமீபத்தில் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், விசா கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்திற்காக மாணவர் ஒருவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பது, அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், அந்த பகுதியில் வசிப்போரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Delay in getting visa-Student commits suicide..!