இசைவாணியுடன் துணை நிற்க வேண்டும் - நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை!
Isaivani issue neelam panbattuaiyam statment
கிறிஸ்துவ மதத்திற்கு ஆதரவாக பாடிய பாடலில் இந்து மதக் கடவுளான ஐயப்பன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பாடிய விவகாரத்தில், விடுதலை சிறுத்தை கட்சி ஆதரவாளர்கள் அட்டகத்தி இயக்குனர் பா ரஞ்சித், இசைக் கலைஞர் இசைவாணி ஆகியோர் மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்ததுடன், இசைவாணியுடன் துணை நிற்க வேண்டும் என்று நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் சபரிமலைக்குப் பெண்கள் செல்வது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம். பாலினப் பாகுபாட்டை முன்வைத்துப் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக் கூடாது என்று தீர்ப்பளித்தது. அதை ஆதாரமாகக் கொண்டு மிகப்பெரிய விவாதமும் நடந்தது. அதைத் தொடர்து நாட்டிலுள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன.
இதே காலகட்டத்தில்தான். நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் 'The Casteless Collective' என்கிற இசைக்குழு உருவானது. சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமூக உரிமைகளைக் கோரும் பாடல் வரிகளோடு 'The Casteless Collective' பல பாடல்களை இயற்றியது. சாதிய ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை, உணவுப் பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்டவைகள் இதில் அடக்கம்.
அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்த உரிமையைக் கோருகிற பாடல்களாகத்தான் அவை இயற்றப்பட்டன. 'I am sorry iyyappa என்கிற பாடலும் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு துவங்கி, பின் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக அமையப்பெற்றது. இப்பாடலை பாடியது இசைவாணி, எழுதி இசையமைத்தது 'The Casteless Collective'
2018ஆம் ஆண்டு 'மெட்ராஸ் மேடை' என்கிற இசை நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட 'The Casteless Collective' இசைக்குழு, அதற்குப் பின்னால் பல்வேறு மேடைகளில் பாடல்களைப் பாடி வருகிறது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு, கடந்த ஒரு வார காலமாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறது ஒரு குழு. அடிப்படையில் அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில் கோயில் நுழைவைக் கோரும் உரிமையும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த முழு உண்மையை மறைத்து, அந்த மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக இருக்கிறது என, சமூக வலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்ப முயற்சிப்பதின் மூலம், சமூகப் பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என முயல்கிறது ஒரு கூட்டம்.
சமூகப் பொறுப்புள்ள ஏராளமான ஆளுமைகளால் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட குழுவாக 'The Casteless Collective' குழு இயங்கி வந்திருக்கிறது. வெகுஜன தொலைக்காட்சிகளில், சமூக ஊடக தளங்களில் இசைக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. பாடகர் இசைவாணி கடந்த 2020ஆம் ஆண்டு பிபிசி அங்கீகரித்த சிறந்த நூறு பெண் ஆளுமைகள் பட்டியலிலும் இடம் பிடித்து தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.
இத்தனை பொறுப்புடனும், போற்றத்தக்கத் திறனுடனும் முன்னேறி வரும் பாடகர் இசைவாணியை, கடந்த ஒரு வார காலமாக ஆபாசமாகச் சித்திரித்தும், தொலைபேசியில் மிரட்டியும், சமூகவலைதளத்தில் அவதூறுகளைப் பரப்பியும் வருகின்றனர். ஒரு கலைஞர் மீது வைக்கப்படும் குறி என்பது தனிநபர் சம்மந்தப்பட்டது கிடையாது. அந்த மிரட்டல் இனி உருவாகி வரவிருக்கும் கலைஞர்களுக்கும் சேர்த்தே என்பதுதான் இதிலுள்ள பேராபத்து. சட்டப்படி சம்மந்தப்பட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகர காவல்துறை உரிய நடவடிக்கைக்கு எடுக்கும் என்று நம்புகிறோம்.
கோயில் நுழைவு என்பது அடிப்படை உரிமை, சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மறுக்கப்பட்டவைகளைக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்ததின் விளைவாகத்தான் இன்று அவை சட்டமாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்பாட்டைக் கண்டித்துத் தான் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு செயல்படும், ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் ஒவ்வொருவரும், பாடகர் இசைவாணி அவர்களுடன் துணை நிற்க கோருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Isaivani issue neelam panbattuaiyam statment