இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா..ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரம்!
India advances to finals Beat Australia!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார். மேலும் இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். அதனை தொடர்ந்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் கண்டது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது ரோகித் சர்மா இரு முறை கேட்ச்சில் இருந்து தப்பித்தார்.
இதையடுத்து மறுபுறம் துணை கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ரோகித் சர்மா நிதானமாக ஆடி ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 28 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களில் அவுட் ஆனார். மறுபுறம் விராட் கோலி அரைசதம் கடந்தார். தொடர்ந்து அக்சர் படேல், கோலியுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த இணையில் அக்சர் படேல் 27 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் களம் கண்டார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 ரன்களில் அவுட் ஆனார்.
இதையடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா களம் புகுந்தார். இறுதியில் இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
English Summary
India advances to finals Beat Australia!