தனது வாழ்க்கையை மேடையில் விவரித்த இளம்பெண்.! கட்டி தழுவி ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி..!
international girl child day celebration in delhi
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 11 தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சிறுமிகள், பெண்கள் கலந்துகொண்டு, தனது சிறு வயதில் வாழ்வில் எதிர்கொண்ட அனைத்து பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
அப்போது பீஹார் மாநிலத்தை சேர்ந்த குலாப்ஷா பர்வீன் என்ற இளம்பெண் தெரிவித்ததாவது, ''பிஹார் மாநிலம் மசார்கி கிராமத்தை சேர்ந்தவள் நான். எனக்கு 15 வயது ஆனபோது 55 வயதுடைய நபருக்கு என்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். இதற்கு முன்பாகவே என் கணவருக்கு திருமணமாகி பத்து பிள்ளைகள் இருந்தனர்.
என் கணவரின் சகோதரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் என்னை சித்ரவதைபடுத்தினர். எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து காப்பகம் ஒன்றில் தஞ்சம் அடைந்தேன். அந்த காப்பகத்தில் எனது பள்ளிப் படிப்பை தொடர்ந்தேன். ஆனால் எனக்கு 18 வயது ஆன பிறகு காப்பகத்தின் நிர்வாகிகள் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். வீட்டுக்கு வந்த என்னை சொந்த குடும்பத்தினரே அவதூறாக பேசி, அவமரியாதை செய்து, கணவர் வீட்டுக்கு போ என்று துரத்தினர்.
வேறு வழியில்லாமல் திண்டாடி வீட்டில் இருந்து மீண்டும் வெளியேறி ஐ.நா.அமைப்பின் யூனிசெப் நிர்வாகிகளை தொடர்பு கொண்டேன். எனக்கு அவர்கள் ஆதரவு கொடுத்து கணினி பயிற்சி, கணக்கியல் உள்ளிட்ட பல தொழிற்கல்வி பாடங்களை கற்பித்தனர்.
அதன் பிறகு எனது பெயரை தாரா சாண்டில்யா என்று மாற்றிக்கொண்டேன். யூனிசெப் நிர்வாகிகள் செய்த உதவியால் நான் மிகப்பெரிய பேக்கரி நிறுவனத்தில் பணியாற்றினேன். தற்போது புதிதாக போக்குவரத்து நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறேன்'' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
தனது வாழ்க்கையை இளம்பெண் ஒருவர் மேடையில் விவரித்தபோது நா திணறினார். இதைப் பார்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஓடோடிச் சென்று அந்தப் பெண்ணை கட்டியணைத்து ஆறுதல் கூறி அவரை தேற்றினார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
international girl child day celebration in delhi