காசா மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்; ஒரே நாளில் 57 பேர் பலி..!
Israels airstrikes on Gaza kill 57 in one day
காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் வான் வழி தாக்குதலில் ஒரே நாளில் 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023-இல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் அந்நாட்டிற்குள் புகுந்து தொடர் தாக்குதல் நடத்தியதுடன், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், 50,752 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 1.15 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. ஆனால், அதை ஹமாஸ் அமைப்பு ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை தொடர்ந்துள்ளது.

அதில் முக்கிய நகரமான காசாவில் பள்ளிக்கூடம், அகதிகள் முகாம், மருத்துவமனை போன்ற இடங்களை தேர்வு செய்து வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகின்றது. இதில், கான் யூனுசில் உள்ள மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டிருந்த ஊடக கூடாரம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன், டெய்ர் அல் - பலாஹ் நகரில் உள்ள மருத்துவமனையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அகதிகள் கூடாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு காசா நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 57 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவுற்றதை அடுத்து, ஒரு மாதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக ஹமாஸ் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பெரும்பாலான ட்ரோன்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
English Summary
Israels airstrikes on Gaza kill 57 in one day