காரைக்கால்: விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு.. தீவிர கடையடைப்புப் போராட்டம்!
Karaikal student death store shutdown strike
காரைக்காலில் தனியார் பள்ளியில் விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காரைக்காலில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த பாலமணிகண்டன் என்பவர் விஷம் கலந்த குளிர்பானம் அருந்தியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவருக்கு அந்த குளிர்பானத்தை பள்ளி காவலாளி மூலம் அதே வகுப்பு மாணவி ஒருவரின் தாயார் சகாயாராணி விக்டோரியா என்பவர் கொடுத்தது தெரிய வந்த நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையே, அரசு பொது மருத்துவமனை உரிய சிகிச்சை அளிக்காததால் தான் மாணவர் உயிரிழந்தார் என பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பொது மருத்துவமனையை நவீன நிலைக்கேற்ப தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டத்திற்கு காரைக்கால் போராளிகள் குழு அழைப்பு விடுத்தது.
இதனை தொடர்ந்து, விஷம் கலந்து கொடுத்த பெண் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர் குடும்பத்திற்கு புதுவை அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதே நாளில் இந்து முன்னணி அமைப்பும் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
இதை தொடர்ந்து, காரைக்கால் நகரப் பகுதியிலும், பிற இடங்களிலும் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, பள்ளி தனியார் வேன்கள் நிறுத்தப்பட்டதால் பெற்றோர்கள் இருசக்கர வாகனம், கார்களில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
English Summary
Karaikal student death store shutdown strike