முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு..! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு ஜெயங்கொண்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மு.க ஸ்டாலின் அங்குள்ள பயணிகள் விடுதியில் தங்கினார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை 9.30 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில்  புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் தொடங்கவுள்ள டீன் ஷூஸ் குழுமத்தின் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதன் பின்னர் அவர் காலை 10.30 மணியளவில் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் தமிழ்நாட்டினை ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாநிலமாக மாற்றும் "ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்குகிறார்.

காலை 11.15 மணியளவில் அரியலூர்-செந்துறை செல்லும் சாலையில் உள்ள கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர் மாவட்டத்தில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 27 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 456 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மதியம் 12.50 மணிக்கு பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அங்கு ஓய்வெடுக்கிறார்.

மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து இரவு 7.55 மணியளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin visit ariyalur perambalur district at today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->