உத்தரகாண்ட் : ராணுவ கட்டிடங்களில் விரிசல் - தலைமைத் தளபதி தகவல்.!
near uttarkant twenty eight army buildings cracks
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்திற்குட்பட்ட ஜோஷிமத் மற்றும் கர்ணபிரயாக் உள்ளிட்ட நகரங்களில் கோவில், வீடு, குடியிருப்பு மற்றும் ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அந்த மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் அரசு நிர்வாகம் குழு அமைத்து செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இஸ்ரோ, ஐ.ஐ.டி. அமைப்புகளுடன் இணைந்து இந்த விரிசலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த விரிசல் காரணமாக, கட்டுமான பணிகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், மாநில அரசு விரிசல் உள்ள ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களை இடிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இயற்கை பேரிடரால் இதுபோன்று ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே செய்தியாளர்களிடம் பேசியதாவது, "உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரில் சுமார் 25 முதல் 28 ராணுவ கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவை ஏற்பட்டால், ஆலி நகரில் அவர்கள் நிரந்தர அடிப்படையில் தங்க வைக்கப்படுவார்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரில் பைபாஸ் சாலையில் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
ஆனால், முன்கள பகுதிகளுக்கு ராணுவ வீரர்கள் சென்றடைவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், அவர்கள் செயலாற்ற தயார் நிலையிலேயே உள்ளனர். உள்ளூர் நிர்வாகத்திற்கு தேவையான அனைத்து வித உதவிகளையும் நாங்கள் வழங்குவோம் என்று அவர் பேசியுள்ளார்.
English Summary
near uttarkant twenty eight army buildings cracks