யார் இந்த அதிஷி? டெல்லி முதலமைச்சர் ஆனது எப்படி?
Pelli new chief minister Adishi
டெல்லி புதிய மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய நிலையில், கடந்த 13ம் தேதி திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையானார்.
இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய, டெல்லியில் புதிய முதலமைச்சராக அதிஷியை, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் இல்லத்தில் இன்று மாலை புதிய முதலமைச்சராக அதிஷியுடன், 5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டுள்ளனர்.
சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித்தை தொடர்ந்து, டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் அதிஷி பதவி ஏற்று கொண்டுள்ளார்.
கடந்த 1998 ஆம் ஆண்டில் 52 நாட்கள் மட்டுமே டெல்லி முதலமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் ஷீலா தீட்சித் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த அதிஷி?
டெல்லி கல்காஜி தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அதிஷி தற்போது முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டுள்ளார். கல்வி, பொதுப்பணி, சுகாதாரத்துறை அமைச்சராகவும் அதிஷி ஏற்கனவே பதவி வகித்திருந்த நிலையில், தற்போது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, இன்று முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டுள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்த அதிஷி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியை முடித்தார்.
பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அதிஷி, கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து, கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிஷி, அமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
English Summary
Pelli new chief minister Adishi