ராமர் பாலம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா? 8ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்கு!
Rama Bridge declared heritage symbol Case pending for 8 years
தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை கடற்கரை பகுதி வரை சுண்ணாம்பு கற்களால் ஆன பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என இந்து மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலம் சிதைந்து போகும் என மேற்கோள் காட்டி அந்த திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ராமர் பாலத்திற்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் நிறைவேற்றப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க கடந்த 2015 ஆம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி மேலும் ஒரு வழக்கை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் பட்சத்தில் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதியளித்தார். இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்பொழுது மத்திய அரசால் எந்தவித பதில் மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆஜரான சுப்பிரமணியசுவாமி "கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. ராமர் பாலத்தை பாரம்பரிய புராதான சின்னமாக மத்திய அரசால் அறிவிக்க முடியுமா? முடியாதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது" என குற்றச்சாட்டினார்.
அப்பொழுது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் "இந்த வழக்கின் பதில் மனு தயாராகி சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே பதில் மனு தாக்கல் செய்ய கால அட்டகாசம் வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஆறு வார காலம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இடைப்பட்ட காலக அவகாசத்தில் பதில் மனு மற்றும் விளக்க மனு தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டனர்.
English Summary
Rama Bridge declared heritage symbol Case pending for 8 years