"பரவலாக வினாத்தாள் கசியவில்லை.. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது" - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்...!!
SC Says No Systematic Breach in NEET Exam Question Paper Leak
கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவர்கள் பலரும் தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் பல்வேறு நபர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்நிலையில் வினாத்தாள் கசிவு உறுதியானதால் நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய் சந்திரசூட், பிற நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று (ஆகஸ்ட் 2) தீர்ப்பு வழங்கினர். அதில், "நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு பரவலாக நடைபெறவில்லை. மேலும் திட்டமிட்டும் நடைபெறவில்லை.
இதனால் தேர்வின் புனிதத் தன்மை கெட்டு விட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எனவே நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய முடியாது. அதே சமயம் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்த ஆண்டில் இருந்து இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத படி, தேசிய தேர்வு முகமையும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நீட் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு தனது அறிக்கையை செப்டெம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்"என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
SC Says No Systematic Breach in NEET Exam Question Paper Leak