புதையல் தருவதாக கூறி ஆடு வியாபாரிகளிடம் மோசடி - 6 பேர் கைது.!
six peoples arrested for money fraud in telangana
தெலங்கானா மாநிலத்தில் உள்ள கொத்தகூடம் மாவட்டம் சூர்யா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் புச்சையா, கிரண் மற்றும் லிங்கையா. இவர்கள் ஆடு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் என்டிஆர் மாவட்டம் திருவூரு நகரைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் தனது கூட்டாளிகள் 10 பேருடன், ஆடு வாங்குவது போல் சூர்யா பேட்டை சந்தைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு ஆட்டு வியாபாரிகளான புச்சையா, கிரண், லிங்கையா ஆகியோருடன் நட்பு ஏற்படுத்தி நெருங்கி பழகி வந்தனர். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் கிடைத்துள்ளதாக கிருஷ்ணாவின் நண்பர்கள் கூறியுள்ளனர்.
மேலும், 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அந்த புதையலை உங்களுக்கே கொடுத்து விடுகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்களை அந்த புதையலை வாங்க கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள பல்வன்ச கிராமம் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு வரவழைத்தனர்.
இதனை உண்மை என்று நம்பிய ஆட்டு வியாபாரிகள் மூவரும், வியாபாரம் செய்வதற்காக வைத்திருந்த 40 லட்ச ரூபாய் பணத்துடன் அங்கு சென்றனர். அதன் படி பணத்தை அந்த மோசடி கும்பலிடம் இதனை வாங்கி கொண்ட அந்தக் கும்பல் புதையல் என்று கூறி, சாக்கு மூட்டை ஒன்றை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேக வேகமாக தப்பிச் சென்றது.
இதைத் தொடர்ந்து, ஆட்டு வியாபாரிகள் மூன்று பேரும் சாக்கு மூட்டையைப் பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே பண்டல் பண்டலாக வெள்ளை காகிதங்கள் இருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்டு வியாபாரிகள் மூன்று பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து கொத்தகூடம் போலீஸில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மோசடி கும்பலைச் சேர்ந்த 11 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு போலீஸார் இருப்பதை பார்த்த அந்த கும்பல் காரை திருப்பி தப்பித்துச் செல்ல முயன்றது.
அவர்களை போலீஸார், விரட்டி பிடித்து விசாரணை செய்த போது ஆறு பேரும் புதையல் மோசடிக் கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. உடனே அவர்களைக் கைது செய்த போலீஸார், காரில் இருந்த 30 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பின்னர் தலைமறைவாகி உள்ள ஐந்து பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six peoples arrested for money fraud in telangana