தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது - மத்திய உணவுத்துறை செயலாளர்
State and Union Territories Food industry Secretaries Conference in delhi
டெல்லியில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் "ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு" என்ற திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
அப்போது பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளதாவது: "தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது விநியோக நடைமுறை மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறையின் திட்டங்களை மாநிலங்கள் முழுமையாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.
அதேபோல், இந்திய அரசு 2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் மற்றும் விநியோகம் போன்றவற்றை உறுதி செய்ய மாநிலங்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.
அத்துடன் மாநிலங்கள் நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை ஆராய வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை வழங்குவதை உறுதி செய்வதில் மாநிலங்கள் எடுத்துள்ள முயற்சிகள் அனைத்தும் பாராட்டத்தக்கது. இந்தத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் 91 கோடிக்கும் மேலானோர் பயன் அடைந்துள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
State and Union Territories Food industry Secretaries Conference in delhi