செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு.. 6 மாதம் அவகாசம் கேட்டு காவல்துறை இடையீட்டு மனு.!!
TNPolice petition seeking 6months time to file report in SenthilBalaji fraud case
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையும், தமிழ்நாடு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையும் தனித்தனியாக விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
மேலும் தமிழ்நாடு மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு மாதத்திற்குள் இந்த வழக்கின் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அவ்வாறு தவறும் பட்சத்தில் உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய நேரிடும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுபடி தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த 6 மாதம் கால அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருப்பது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போன்ற பல்வேறு காரணங்கள் அந்த இடையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு மாத கால அவகாசம் முடிவடைய சில நாட்களே உள்ளதால் செந்தில் பாலாஜி வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
TNPolice petition seeking 6months time to file report in SenthilBalaji fraud case