புதுச்சேரி || காவல் நிலையத்தில் தீக்குளித்த இளம்பெண் சாவு.!
woman died for fire to self in puthuchery police station
புதுச்சேரி || காவல் நிலையத்தில் தீக்குளித்த இளம்பெண் சாவு.!
புதுச்சேரி மாநிலம் பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு ரூ 5 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இந்த கடனை பலமுறை கேட்டும் ஏழுமலை தராததால் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆனால், காவல் நிலையத்திலும் சரியான நடவடிக்கை எடுக்காததால் சந்திரன் ஏழுமலையிடம் நேற்று நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது ஏழுமலை 'பணம் கொடுக்க முடியாது, எங்கு வேண்டுமானாலும் போய் சொல்' என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி உள்ளிட்ட இருவரும் நேற்று மாலை காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு சென்று மீண்டும் புகார் கொடுத்தனர்.
அப்போது ஏழுமலையும், காவல் நிலையத்திற்கு வந்து சந்திரன் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் இருந்த காவல் அதிகாரிகள் ஏழுமலையை இருக்கையில் அமர வைத்து விட்டு கடன் கொடுத்த சந்திரனை வெளியே போகுமாறு கூறியுள்ளனர். மேலும், ஏழுமலை, காவலர்கள் முன்னிலையில் உன் பணத்தை கொடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
காவல் நிலையம் வந்தும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் சந்திரனின் மனைவி கலைச்செல்வி வாகனத்திற்கு வாங்கிச் சென்ற பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைப்பார்த்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கலைச்செல்வி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், கலைச்செல்வியின் உறவினர்கள் காலாப்பட்டு காவல் நிலையத்தின் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி காவல் துறை சார்பில், காலாப்பட்டு காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இரண்டு பேரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
woman died for fire to self in puthuchery police station