தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்ய போறீங்க? அதை சூப்பரா செய்ய இதோ டிப்ஸ்.!
Diwali sweets special thing and special Tips
தீபாவளி நெருங்கிவிட்டது... தீபாவளி தொடர்பான விஷயங்கள் அனைத்தும் களைக்கட்ட தொடங்கிவிட்டது. தீபாவளி என்றதும் முதலில் நினைவிற்கு வருவது பட்டாசு, அடுத்தது விதவிதமாக செய்யப்படும் இனிப்பும், காரமும் நிறைந்த பலகாரங்கள். விதவிதமான பலகாரங்கள் செய்ய காத்து கொண்டிருக்கும் உங்களுக்கான டிப்ஸ் இதோ.
அதிரசம் உடைந்து போகிறதா?
அதிரசம் செய்யும்போது உடைந்து போனால் சிறிதுநேரம் மாவை அப்படியே ஊறவிட்டு விடுங்கள். ஊறவிட்டு அதிரசம் செய்தால் உடைந்து போகாமல் வரும்.
மொறுமொறு பலகாரம் :
முறுக்கு, சீடை, தேன்குழல் செய்யும்போது அரிசி, உளுந்துமாவுடன் சிறிது ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து சேர்த்தால் பலகாரம் மொறுமொறுவென ருசி கூடுதலாக இருக்கும்.
காலிஃப்ளவர் ரெசிபி :
காலிஃப்ளவரில் தீபாவளி அன்று ஏதாவது செய்து அசத்திவிட நினைத்தால், தீபாவளிக்கு முதல் நாளே காலிஃப்ளவரை சுத்தம் செய்து அரைவேக்காடாக வேகவைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி பச்சடி :
தீபாவளிக்கு மதிய உணவில் கண்டிப்பாக இஞ்சிப் பச்சடி சேர்த்து சாப்பிடுங்கள். ஏனெனில் தீபாவளி அன்று நிறைய பலகாரங்களை சாப்பிடுவோம். இதனால் ஏற்படும் வயிற்று உப்புசத்தை இஞ்சி பச்சடி விரட்டிவிடும்.
மிருதுவான மைசூர்பாகு :
இரண்டு பங்கு பாசி பருப்பு, ஒரு பங்கு கடலை பருப்பு என்ற விகிதத்தில் அரைத்துக்கொண்டு, அதில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
பாகு முறுகாமல் இருக்க :
சர்க்கரை பாகு காய்ச்சும்போது, சில துளிகள் எலுமிச்சைச்சாறு விட்டால் பாகு முறுகாமல் இருக்கும்.
சிட்டிகை உப்பு :
எந்த வகையான இனிப்பு செய்தாலும், அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும். இதனால், இனிப்பு திகட்டாமல் இருக்கும்.
எண்ணெய் வேண்டாமே :
ஏற்கனவே பலகாரங்கள் சுட்ட எண்ணெயில் மீண்டும் பலகாரங்கள் செய்யலாம் என்று சேமித்து வைக்க வேண்டாம். அந்த எண்ணெயை உடனடியாக தாளிப்பதற்கு உபயோகப்படுத்திவிடவும். மறுபடியும் உபயோகப்படுத்தினால் எண்ணெய் கெட்டியாகி நம் உடம்பில் கொலஸ்ட்ராலாக தங்கிவிட வாய்ப்புள்ளது.
எண்ணெய் பொங்காமல் இருக்க :
பலகாரம் செய்யும்போது, எண்ணெய் பொங்கி வழிந்தால் கறிவேப்பிலையையோ, சிறிது புளியையோ போட்டு எடுத்து விட்டு பயன்படுத்தினால் எண்ணெய் பொங்காது, காறல் வாசனையையும் தவிர்க்கலாம்.
நொடியில் சாப்பாடு :
தீபாவளி சமயத்தில் திடீர் 'விசிட்" அடிக்கும் விருந்தினரை உபசரிக்க காய்கறிகளை ரெடியாக நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். சாதம்கூட நிறைய செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால், விருந்தினர் வரும்போது சூப்பர் ஃபாஸ்ட் ஃப்ரைட் ரைஸை நொடியில் தயார் செய்யலாம்.
இந்த தீபாவளியில் வகை வகையான ஸ்பெஷல் பலகாரங்களை செய்து அசத்தி, குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழுங்கள்.!
English Summary
Diwali sweets special thing and special Tips