மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை பெற்றுள்ள '9' விஷயங்கள் ...இந்த விஷயங்களை வைத்தே எதிர்கால பட்ஜெட் இருக்குமாம்...!!
9 Things Got Prioritize In Central Budget
2024 - 2025ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்துள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது அமைச்சரவையின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
அதில் நிர்மலா சீதாராமன் 9 விஷயங்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் படி, விவசாய உற்பத்தி திறன் பெருக்கம், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சமூக நீதி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகிய 9 விஷயங்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளது.
இந்த முன்னுரிமைகள் மூலம் அனைவருக்குமே அதிகளவில் வாய்ப்புகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம். எனவே முன்னுரிமை அளித்துள்ள இந்த 9 விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும்.
மேலும் இந்த 9 முன்னுரிமைகளில் வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் என 4 பகுதிகளை முதன்மையாக எடுத்துக் கொண்டு கவனம் செலுத்தப் படும். அதன்படி ரூ. 2 லட்சம் கோடி செலவில் வெறும் ஐந்தே ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
English Summary
9 Things Got Prioritize In Central Budget