மக்களை முகம் சுளிக்க வைக்கும் உதயநிதி & ஸ்டாலின் அரசு! என்னங்க நடக்குது தமிழ்நாட்டுல? கொந்தளிக்கும் எடப்பாடி! - Seithipunal
Seithipunal


மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் தமிழக அரசுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஸ்டாலினின் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது வாரிசு துணை முதலமைச்சர் உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும்; சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை செய்துள்ளனர். 

அதே போல், கடந்த ஓரிரு நாட்களாக கோவை, திருப்பூர், புதுகோட்டை, சேலம் உட்பட பல மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மழையினால் பல சாலைகள் வெள்ள நீரால் மூழ்கியும், மண் சரிவு ஏற்பட்டும் பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.  மின் கம்பிகள் அறுந்து விழுந்து உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகங்களும், மாவட்ட அமைச்சர்களும் செயல்பாடற்றுக் கிடப்பது கண்கூடாகத் தெரிகிறது.

நேற்று (13.10.2024) முதல், சென்னை மாநகராட்சியில் திரு. உதயநிதி ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறை வீடியோக்களையும், படங்களையும், செய்திகளையும், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் வெளிப்படுத்தி வருகிறது. 

ஆனால், மழை வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை! 

அவர்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வாரிசு அடிப்படையில் துணை முதலமைச்சராகியுள்ள திரு. உதயநிதி ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவதில் நிர்வாகத் திறனற்ற திரு. ஸ்டாலினின் திமுக அரசு குறியாக உள்ளது.

இதனால், கன மழையால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் இன்று காலைவரை எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மாண்புமிகு அம்மாவின் ஆட்சியிலும், எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும், இயற்கை பேரிடர் ஏற்பட்ட காலங்களில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும், மாவட்ட அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும் மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல், களத்தில் நேரடியாக இறங்கி, இதய சுத்தியோடு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து திரு. ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். சென்னை மாநகர மக்கள் திரு. ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அருகிலுள்ள மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்தி வருவதை இன்றைய தினம் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன.

தற்போது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும், அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டானின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK Govt MK Stalin Udhay


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->